பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணை நீதிக்குப் புறம்பானது: முன்னாள் நீதிபதி விக்னேஷ்வரன்
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிராண குற்றப் பிரேரணை சட்ட ரீதியான விடயம் அல்ல என்பதும் அது ஒரு அரசியல் ரீதியான விடயம் என்பதும் வெளிப்படையாகவே உணர முடிகிறது என முன்னாள் நீதிபதி விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார். பீபீசி செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். முன்னாள் நீதிபதி விக்னேஷ்வரன் அச் செவ்வியில் மேலும் தெரிவித்துள்ளதாவது, அரசியல் ரீதியான விடயமாக இருப்பினும் சட்டத்திற்கு அமைவாகவே நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சட்டத்திற்கு புறம்பாக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் நியாயமற்றது.
பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணையை விசாரிக்கும் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் உள்ள 7 பாராளுமன்ற உறுப்பினர்களில் இருவர் மீது வழங்குகள் தொடரப்பட்டிருந்தன.
இவ்வழக்குகளிற்கான தீர்ப்புக்களை பிரதம நீதியரசர் வழங்கியிருந்தார். அவ்வறான சூழ்நிலையில் பிரதம நீதியரசரிடமிருந்து எதிரான தீர்பினை பெற்றவர்களே, பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணைனை விசாரிக்க அனுமதிப்பது சட்டத்திற்கு புறம்பான விடயம்.
ஒருவர் தொடர்பில் பாதகமான மனநிலையைக் கொண்டவர்கள் என தெரிந்தும் அவர்களை விசாரணைக்குழுவில் அங்கம் வகிப்பதற்கு அனுமதிப்பது முறையல்ல. இது சட்டத்திற்கு அமையாத விடயம். பிரதம நீதியரசருக்கு எதிரான நடவடிக்கை தொடர்பில் கோசங்கள் எழுப்பப்படுவதற்கு இதுவும் ஒரு காரணம்.
இலங்கை அரசியல் யாப்பின் படி மக்களினுடைய உரித்தையே யாராக இருந்தாலும் கவனிக்க வேண்டும். அது பாராளுமன்றத்திற்கு சென்றுள்ள காரணத்தினால் அதனை யாரும் எதிர்க்க முடியாது என்றில்லை. இதன் காரணமாகத்தான் பாராளுமன்றத்திற்கும் நீதித்துறைக்கும் இடையில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நீதிபதிகள் ஒன்றிணைந்து தமது கருத்துக்களை தெரிவித்திருப்பது நீதிக்கு பொருத்தமானது என்றுதான் நான் கூறுவேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply