பல்கலைக்கழகங்களின் கல்வித்தரம் சர்வதேச தரத்துக்கு முன்னேற வேண்டும் : ஜனாதிபதி
பல்கலைக்கழகக் கல்வி தேசிய மட்டத்தில் மாத்திரமல்ல சர்வதேச மட்டத்திலும் தொழில் வாய்ப்புக்களை பெறும் வகையில் முன்னேற்றமடைய வேண்டும். இதற்காக பீடாதிபதிகள், உபவேந்தர்கள், பேராசிரியர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். இதற்காக அரசாங்கம் சகல உதவிகளையும் வழங்குமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கூறினார்.
மட்டக்களப்பு வந்தாறுமூலையிலுள்ள கிழக்கு பல்கலைக்கழகம் அம்பாறை மாவட்டம் ஒலுவிலிலுள்ள தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் நேற்று பாரிய அபிவிருத்திப் பணிகளை ஆரம் பித்து வைத்த அவர் மேற்கண்டவாறு தெரி வித்தார்.
கிழக்கு பல்கலைக்கழகத்தில் 199 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட விஞ்ஞான பீடத்தின் விலங்கியல் துறை கட்டடத் தொகுதியும் நல்லையா அரங்கும் நேற்று முற்பகல் ஜனாதிபதியினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இதேநேரம், தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் பொறியியல் பீடம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இஸ்லாமிய கற்கை அரபு மொழி பீடத்திற்கான கட்டடம், பல்கலை மாணவர்களுக்கான மருத்துவ சிகிச்சை பிரிவுக்கான கட்டடம் ஆகியனவும் ஜனாதிபதியினால் நேற்று தொடக்கிவைக் கப்பட்டன.
கிழக்குப் பல்கலைக்கழகம்
“கல்வியே சிறந்த செல்வம் அறிவுதான் மிகச் சிறந்த ஆயுதம்” என கிழக்குப் பல்க லைக்கழகத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
கிழக்கின் உதயம் போன்று கிழக்கு மாண வர்களின் வாழ்வில் உதயத்தை ஏற்படுத்து வதே அரசாங்கத்தின் நோக்கம் என தெரிவித்த ஜனாதிபதி; குறுகிய மனப்பான்மைகளை புறந் தள்ளி சர்வதேச தரத்திற்கு தம்மை முன் னேற்றிக் கொள்ள முயற்சிக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.
வந்தாறுமூலையிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விலங்கியல் பீடம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு நேற்று ஜனாதிபதியால் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி புனரமைப்பு செய்யப்பட்ட நல்லையா கலையரங்கையும் 200 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட விலங்கியல் பீடத்தையும் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார்.
அமைச்சர்கள் எஸ்.பி. திசாநாயக்க, ரவூப் ஹக்கீம், பஇர் சேகுதாவூத் பிரதியமைச்சர்களான விநாயகமூர்த்தி முரZதரன், எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர், கிழக்கு முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் உட்பட முக்கியஸ்தர்கள், கல்விமான்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டதுடன் ஜனாதிபதி அவர்களுக்கு பல்கலைக்கழக வளாகத்தில் தமிழ் கலாசார முறைப்படி மேளதாள இசை முழக்கத்துடன் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.
ஜனாதிபதி மாணவர்கள் மத்தியில் மேலும் தெரிவித்ததாவது, கிழக்கு மாணவர்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். அரசியல்வாதிகள் கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு வரமுடியாத வெறுப்பான காலகட்டம் ஒன்று இருந்தது. அந்நிலை மாறி மாணவர்களும் மக்களும் பல்கலைக்கழகத்துக்குள் மகத்தான முறையில் எம்மை வரவேற்பது மகிழ்ச்சி தருகிறது.
எதிர்கால புத்திஜீவிகளாக கிழக்கு மாணவர்கள் உருவாக வேண்டும். உங்களை நம்பியே இந்த நாட்டின் எதிர்காலம் உள்ளது. கிழக்கு பல்கலைக்கழகத்தின் பல பிரிவுகள் கல்லடி, செங்கலடி போன்ற இடங்களில் உள்ளன.
இன்று விலங்கியல் பீடம் திறக்கப் பட்டுள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தின் முன்னேற்றத்திற்காக அரசாங்கம் எதிர்காலத்திலும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
மூவின மாணவர்களும் இங்கு கற்பது பெருமை தருகிறது. அனைவரதும் ஒற்றுமையே பிரதானமாகும்.
இது நாம் பிறந்த நமது தாய்நாடு. நாம் ஒரு தாயின் மக்களே. எம்மில் பேதங்கள் இருக்க முடியாது. இனவாதம் மதபேதங்களுக்கு இந்த நாட்டில் இடமில்லை.
கிழக்கின் உதயம் போல உங்கள் வாழ்வின் உதயத்திற்கான சகலதையும் நாம் பெற்றுக் கொடுப்போம்.
பெற்றோருக்கு கீழ்ப் படிந்து அவர்களின் ஆசியையும் நற் பெயரையும் பெற்று முன்னேற வேண்டும்.
உலக பல்கலைக்கழகங்களின் வரிசையில் 12,300 வது இடத்திலேயே இந்த பல்கலைக்கழகம் உள்ளது. இது திருப்தி தருவதாக இல்லை. யாழ் பல்கலைக்கழகம் 7000வது இடத்தில் உள்ளது. கிழக்குப் பல்கலைக்கழகம் முதல் 100 பல்கலைக்கழகங்களுக்குள் வரும் வகையில் முன்னேற வேண்டும். அந்த சவாலை வெற்றி கொள்ள அர்ப்பணிப்புடன் கற்று முன்னேற வேண்டும்.
1986 ல் இந்த பல்கலைக்கழகம் சகல வசதிகளையும் கொண்ட தேசிய பல்கலைக்கழகமாக மாற்றம் பெற்றது. இங்கிருந்த குறைபாடுகள் நிவர்த்தி பெற்று வருவது கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.
பல வருடங்களாக புலிகள் பிடியில் பல்கலைக்கழகம் அகப்பட்டிருந்தது. இதன் அபிவிருத்தியும் முன்னேற்றமும் தடைப்பட்டன. இந்த மேடையும் வெடித்துச் சிதறிய சம்பவமுண்டு.
இந்த பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிய நிதி முறையாக செலவு செய்யப்படாமல் பல திறமைசாலிகள் நாட்டை விட்டு வெளியேறும் நிலையும் ஏற்பட்டது. இப்போது பதவியிலுள்ள உபவேந்தர் கிட்ணர்கோவிந்தராஜா மீண்டும் இங்கு வந்து பதவியேற்று பல்கலைகழக்த்தை முன்னேற்றியிருப்பது மகிழ்ச்சி.
இதனை சர்வதேச தரத்தில் உயர்ந்த பல திட்டங்களை நாம் முன்னெடுத்து வருகிறோம். புதிய பாடநெறிகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என உபவேந்தர் தெரிவித்துள்ளார். அதற்கிணங்க இவ்வருட இறுதிக்குள் மருந்துவ பீடத்திற்கான கட்டடத்தை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பமாகும். இதற்கான அமைச்சரவைப் பத்திரம் உயர் கல்வியமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
தாய் நாட்டை விட சிறந்த நாடு வேறு எங்கும் இருக்க முடியாது. உங்கள் நாட்டை ஒருபோதும் மறக்க வேண்டாம். தாய்நாடே சிறந்ததென தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பொறியியல் பீடத்தை நேற்று உத்தியோகபூர்வமாகத் திறந்துவைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.
322 மில்லியன் செலவில் இக்கட்டடம் நிர்மாணிக்கப்பட்டது. குவைத் நாட்டின் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட இக்கட்டடத்தின் திறப்பு விழாவில் அமைச்சர்களான எஸ்.பி. திஸாநாயக்க, ரவூப் ஹக்கீம், ஏ.எல்.எம். அதாஉல்லா, சிரேஷ்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி;
இந்த உலகில் களவாட முடியாதது அறிவு மாத்திரமே. இது பெரியதொரு செல்வம். பல்கலைக்கழக மாணவர்கள் சிறப்பாகக் கற்று சர்வதேச ரீதியில் தொழில்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கம். அவ்வாறு சர்வதேச ரீதியில் தொழில்புரியச் சென்றாலும் நம் தாய் நாட்டை மறக்கக்கூடாது. சாந்தி, சகவாழ்வு சமாதானம் இவற்றையே இஸ்லாமிய மதம் வலியுறுத்துகிறது. பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் இனவாதம், மதவாதம், தீவிரவாதம் இருக்கக்கூடாது.
நீங்களே நாட்டைப் பாதுகாக்க வேண்டும். நீங்களே இந்த நாட்டின் எதிர்கால புத்திஜீவிகள். இன, மதங்களுக்கு அப்பால் ஐக்கியத்தை இங்கு காண முடிகின்றது. தமிழ், சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் இங்கு ஒற்றுமையாகக் கல்வி பயில்கின்றனர். இது ஏனைய பல்கலைக்கழகங்களுக்கு முன்மாதிரியாகும்.
கடந்த 5 வருடத்தில் அரசாங்கத்தின் மூலமும், குவைத்தின் கடன் உதவி மூலமும் தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் பல அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டுள்ளோம். இன்று பொறியியல் பீடமும் நிர்மாணித்து வழங்கப்பட்டுள்ளது. இதற்கான கடனுதவியை வழங்கிய குவைத் அரசாங்கத்துக்கு இலங்கை அரசின் சார்பில் நன்றி கூறிக்கொள்கிறேன்.
இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள பொறியியல் பீடம் இஸ்லாமிய கல்வி, அரபு மொழி பீடம் என்பன இப்பல்கலைக்கழகத்தின் முக்கிய தேவைகளாகும். பல்கலைக்கழக மாணவர்கள் தோல்விகளை அல்ல வெற்றிகளைப் பெறுபவர்களாகவே இருக்க வேண்டும். வெற்றி பெறுவதற்காகவே அவர்கள் உருவாக்கப்பட வேண்டும். அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற உயர் கல்வி பீடங்கள் அர்ப்பணிப்புடன் உழைக்க வேண்டும்.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலும் கலை மற்றும் நுண்கலை பீடங்கள் அமைக்கப்பட்டு ஏனைய துறைகளைப் போல அத்துறைகளிலும் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை உபவேந்தர் மேற்கொள்ள வேண்டும். நான் 2005 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இங்கு விஜயம் செய்த போது இப்பகுதி பெரும் காடாகக் காட்சியளித்தது. சிறிய கட்டடமொன்றிலேயே பல்கலைக்கழகத்தைக் கண்டேன்.
இன்று இந்தப் பல்கலைக்கழகம் முன்னேற்றம் கண்டுள்ளது. எனது நண்பர் மறைந்த எம்.எச்.எம். அஷ்ரப் கண்ட கனவு இந்த சர்வ கலாசாலை மூலம் நிறைவேறியுள்ளது. இங்கு கல்வி கற்கும் மாணவர்கள் தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் புகழ்பெற்ற பொறியியலாளர்களாக உருவாக வேண்டும் என நான் வாழ்த்துகிறேன்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும், உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவுக்கும் உபவேந்தர் நினைவுச் சின்னங்களை வழங்கி கெளரவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply