ஈரான் அதிபர் மீது ஷூ வீச்சு
எகிப்து சென்றுள்ள ஈரான் அதிபர் மஹ்மூத் அகமதி நிஜாத் மீது ஷூ வீசப்பட்டது. ஈரான் அதிபர் மஹ்மூத் அகமதி நிஜாத், 3 நாள் சுற்றுப்பயணமாக எகிப்து சென்றுள்ளார். இரு நாடுகளுக்கிடையேயான உறவை மேம்படுத்தும் வகையிலும், அங்கு நடைபெறவுள்ள இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்கும் வகையிலும் அவரின் பயணம் அமைந்துள்ளது.
அகமதி நிஜாதுக்கு, கெய்ரோ விமான நிலையத்தில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. எகிப்து அதிபர் முகமது மோர்ஸி அவரை வரவேற்றார்.
ஆனால், கெய்ரோவில் உள்ள புராதனம் மிக்க மசூதிக்குச் சென்ற நிஜாதை முற்றுகையிட்ட சன்னி பிரிவு முஸ்லிம்கள், அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அப்போது ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவர் “கோழை’ என்று கூறியபடி அவர் மீது ஷூ வீசினார். ஷூ வீசியவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மேலும், மசூதியின் பிரதான வாயிலில் சன்னி முஸ்லிம்கள் தங்களது ஷூக்களை உயர்த்திக் காண்பித்தபடி கோஷம் எழுப்பினர். இதையடுத்து பாதுகாவலர்கள் அகமதி நிஜாதை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.
முன்னதாக, செவ்வாய்க்கிழமை அல்-அஸாரில் நடைபெற்ற கருத்தரங்கில், அஹமதி நிஜாத் பேசுகையில், “”எனது இந்தப் பயணம் இரு நாட்டு மக்களுக்கு இடையே ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கான தொடக்கமாக இருக்கும் என நம்புகிறேன். ஈரான் மக்களின் இதயத்தில், எகிப்து மக்களுக்கு இடமுண்டு” என்று தெரிவித்திருந்தார்.
ஆனால், அவரைத் தொடர்ந்து பேசிய மூத்த மத குரு ஹஸன் அல் ஷபி, “”சில ஷியா பிரிவினர் முகமது அலியின் கூட்டாளிகளை அவமதிக்கின்றனர்” என கடுமையாக விமர்சித்தார். இதனை நிஜாத் தர்மசங்கடத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார்.
சிரியா அதிபர் பசார் அல் அஸாத்துக்கு ஆதரவாக ஈரான் செயல்படுவதைக் கண்டித்து, சன்னி பிரிவு முஸ்லிம்கள் இவ்வாறு எதிர்ப்புத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
ஷியா பிரிவு முஸ்லிம்கள் அதிகமுள்ள ஈரான், சன்னி பிரிவு நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு சன்னி பிரிவினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 30 ஆண்டுகளில் ஈரான் அதிபர் ஒருவர் எகிப்துக்கு வருவது இதுவே முதல் முறையாகும். எகிப்து முன்னாள் அதிபர் ஹோசினி முபாரக் இருக்கும் வரை அமெரிக்க ஆதரவுடன், ஈரானிடம் பகைமை பாராட்டி வந்தார். அவர் காலத்தில் ஈரான் அதிபர் எகிப்துக்கு வருவது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.
மதகுருக்கள் கண்டனம்: கெய்ரோவில் உள்ள சன்னி பிரிவு முஸ்லிம்களின் உயர்ந்த போதனை அமைப்பான அல்-அஸார் மூத்த மதகுரு அகமது அல் தாயேப் கூறியது: சன்னி மக்களின் நாட்டில் ஷியா பிரிவை பரப்ப முயல்கிறார் அகமதி.
அரபு சகோதர தேசம் என்ற வகையில் பஹ்ரைனுக்கு உரிய மரியாதையை அகமதி அளிக்க வேண்டும். பஹ்ரைன் உள்பட வளைகுடா நாடுகளின் உள்விவகாரங்களில் அவர் தலையிடக் கூடாது. ஈரானில் உள்ள சிறுபான்மை சன்னி முஸ்லிம்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றார். பஹ்ரைனில் சிறுபான்மை சன்னி பிரிவு மன்னராட்சிக்கு பெரும்பான்மை ஷியா பிரிவினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். ஷியா பிரிவு போராட்டக்காரர்களுக்கு ஈரான் ஆதரவளித்து வருகிறது.
கடந்த அக்டோபர் மாதம், இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி பஹ்ரைன், ஈரான் தூதருக்கு சம்மன் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply