அபிவிருத்திப் பணிகள் தடைகள் ஏதுமின்றி அரசாங்கத்தினால் முன்னெடுப்பு : ஜனாதிபதி

அரச துறையில் 14 இலட்சம் பேருக்கு சம்பளம் இதர கொடுப்பனவுகளை அரசாங்கம் வழங்கி வருகின்ற போதும் நாட்டின் அபிவிருத்தியைத் தடையின்றி முன்னெடுத்து வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.தபால் துறைக்குப் புதிதாக 1086 அதிகாரிகளை நியமிக்கும் நிகழ்வு நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாதவாறு தபால் துறை முன்னே ற்றத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.அமைச்சர்கள் ஜீவன் குமாரதுங்க, ஏ.எச்.எம். பெளஸி உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில்;

தபால் துறைக்கு முன்னொரு போதும் இல்லாத வகையில் பெருந்தொகை நிதியை அரசாங்கம் செலவிட்டு வருகிறது.

கடந்த வரவு செலவுத் திட்டத்தில் 600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் புதிதாக தற்போது இணைத்துக்கொள்ளப்படுகின்றனர்.

நாட்டில் பயங்கரவாத யுத்தம் உக்கிரமாக இருந்த காலத்திலும் தபால் துறை பின்னடையவில்லை. தபாலகங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்ட யுகம் ஒன்று இருந்தது. மீள அந்த யுகம் வராது. அதற்கு இடமளிக்கப்படமாட்டாது.

அரச சேவையை இல்லாதொழிக்க முற்பட்ட யுகத்தைப் போலல்லாது நாம் அரச துறையை முன்னேற்றி 14 இலட்சம் வரை அரச உத்தியோகத்தர் தொகையை அதிகரித்துள்ளோம். மேலும் 53,000 பட்டதாரிகளை இக்காலங்களில் இணைத்துக் கொண்டுள்ளோம்.

அவர்களுக்கான சம்பளம் ஏனைய கொடுப்பனவுகள் என பாரிய நிதியினை அரசாங்கம் செலவிட்டு வருகிறது.

இத்தகைய சுமைகள் இருந்த போதும் நாட்டின் அபிவிருத்தியை நாம் ஒருபோதும் நிறுத்தவில்லை. வடக்கு, கிழக்கு மற்றும் சகல பகுதிகளிலும் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நிறைசேரி மூலமே இவற்றுக்கான நிதி ஒதுக்கப்படுகிறது. இதனைக் கருத்திற்கொண்டு அரச அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் மக்கள் சேவையை வழங்க வேண்டும்.

தபால் துறைக்கு நீண்ட வரலாறு உள்ளது. 1799 ஆம் ஆண்டில் இதற்கான சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு அந்த வருடத்திலேயே இத்துறை உருவாக்கப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சியில் இடம்பெற்ற இந்த நடவடிக்கைகளுக்கான பதிவுகள் உள்ளன. தபாலகங்கள் அக்காலத்தில் கொழும்பு, காலி, யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் துறைமுகங்களோடு தொடர்பு கொண்டதாக தாபிக்கப்பட்டன. அக்காலத்தின் இன்று போல் வாகனப் போக்குவரத்துக்கள் நடைமுறையிலில்லை.

குதிரை வண்டிலியிலேயே தபால் விநியோகம் இடம்பெற்றது. இத்துறையை நாம் நோக்கும் போது தபால் அதிபர்களுக்கு கிராம மட்டத்தில் சிறந்த கெளரவம் இருந்தது. எமது தற்போதைய பிரதமர் டி.எம். ஜயரத்ன கூட ஒரு காலத்தில் உப தபாலதிபராகப் பணிபுரிந்தே பின்னர் அரசியலுக்குள் பிரவேசித்தவர். கிராமங்களில் விசேட நிகழ்வுகள் இடம்பெற்றால் அவற்றுக் கெளரவ அதிதிகளாக தபாலதிபர்களே அழைக்கப்படுவர்.

இத்தகைய கெளரவமிக்க நகரங்களையும் கிராமங்களையும் இணைக்கின்ற மக்களுக்கு நெருக்கமான சேவையாகிய தபால் துறைக்கு பட்டதாரி இளைஞர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். சிறந்த தொழிநுட்ப அறிவைக் கொண்டுள்ள புதிய அதிகாரிகள் மூலம் சாதாரண மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க முடியுமென நான் நம்புகிறேன். அதற்கு புதிதாக இன்று நியமனம் பெறும் அதிகாரிகளின் அர்ப்பணிப்பு மிக முக்கியமானது. புதிய சமூகம் சர்வதேசத்தோடு ஒன்றிணைகின்ற யுகம் இது. அதற்கான வாய்ப்புக்களை அரசாங்கம் வழங்கி வருகிறது.

சகல துறைகளிலும் ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில் நுட்பம் உட்புகும் காலம் இது. இன்று புதிய நியமனம் பெறும் இளையோர் தமது அறிவை தபால் துறை பதவியோடு மட்டுப்படுத்திக் கொள்ளக்கூடாது. அறிவைப் பல்வேறு துறைகளுக்குமாக பெருக்கிக் கொள்ள வேண்டியது அவசியம். பிறதுறைகளுடனான அறிவைப் பெருக்கிக்கொள்ளும் அதேவேளை குடும்பம் மற்றும் பெற்றோருடனான உறவுகள் பலப்படுத்தப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். இந்நிகழ்வில் ஜனாதிபதி தமிழிலும் உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply