தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நடவடிக்கை

அநுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.  அநுராதபுரம் சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 19 தமிழக மீனவர்களை விடுவித்தல் தொடர்பில் தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிடம் முன்வைத்த கோரிக்கையை அடுத்து அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் உள்ளிட்ட குழுவினர் இன்று (03) அநுராதபுரம் சிறைக்கு விஜயம் செய்தனர்.

அங்கு மீனவர்களை சந்தித்த அக்குழு மீனவர்கள் பிரச்சினையை கேட்டறிந்ததுடன் அவர்களுக்கு தேவையான ஆடை, உணவு உள்ளிட்ட அத்தியாசவசிய பொருட்களை வழங்கி வைத்ததாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் அத தெரண தமிழிணையத்திடம் தெரிவித்தார்.

மேலும் குறித்த மீனவர்களின் வழக்கு எதிர்வரும் ஏப்ரல் 11ம் திகதி விசாரணைக்கு வரும் நிலையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பி.ராஜதுரை தலைமையில் குழுவொன்றை அமைத்து அன்றைய தினம் தமிழக மீனவர்களுக்காக வாதாடி அவர்களை பிணையில் எடுப்பது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டார்.

தமிழக மீனவர்கள் விடுதலை குறித்து ஆறுமுகன் தொண்டமான் ஜனாதிபதியிடமும் பேசியுள்ளதாக செந்தில் தொண்டமான் கூறினார்.

தமிழக மீனவர்களை சந்திக்கச் சென்ற குழுவில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், மாகாண சபை உறுப்பினர்களான ராம், ரமேஷ் உள்ளிட்ட பலரும் அடங்கினர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply