தமிழர் பகுதிகளில் பொலிஸ், காணி அதிகாரத்தை குறைக்க கூடாது – இந்தியா
தமிழர் பகுதிகளில் பொலிஸ் மற்றும் நில நிர்வாக அதிகாரத்தை குறைக்க கூடாது என்று இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் தமிழர் பகுதியான வடக்கு மாகாணத்தில் தேர்தலுக்கு முன்னதாக பொலிஸ் மற்றும் நில நிர்வாக அதிகாரங்களை குறைக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியானது. மேலும், தமிழர் பகுதிகளில் மாகாண சபைக்கான அதிகாரங்களை ரத்து செய்யவும் பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வர அரசு திட்டமிடுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரிசுடன் மத்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் நேற்று தொலைபேசியில் பேசினார்.
தமிழர் பகுதிகளில் அதிகாரங்களை குறைப்பது குறித்து செய்திகள் வெளிவருவது குறித்து கவலை தெரிவித்த குர்ஷித், அதிகாரங்களை குறைக்க கூடாது என்று வலியுறுத்தினார்.
மேலும், ராஜிவ் காந்தி மற்றும் ஜெயவர்த்தனா இடையே செய்யப்பட்ட ஒப்பந்தப்படி, தமிழர் பகுதிகளுக்கு அதிகாரம் அளிக்க வகை செய்யும் இலங்கை அரசியல் சாசனத்தின் 13வது சட்ட திருத்தத்துக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என்றும் குர்ஷித் கோரினார்.
வடக்கு மாகாணத்தில் உயர் பாதுகாப்பு வலய பகுதிகளுக்காக தனியார் நிலங்களை ராணுவம் எடுத்துக் கொள்வதாக வரும் செய்திகள் குறித்தும் பெரிசிடம் குர்ஷித் கவலை தெரிவித்தார்.
மேலும், இலங்கை எல்லைக்குள் ஊடுருவியதாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 26 இந்திய மீனவர்களை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும், போதை பொருள் கடத்தல் குற்றச் சாட்டின் கீழ் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து இலங்கை சிறையில் இருக்கும் 5 மீனவர்களை விரைவில் விடுவிக்க வேண்டும் என்றும் குர்ஷித் வலியுறுத்தினார்.
இந்தியாவின் கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெரிஸ் உறுதியளித்ததாக வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply