பௌத்த புனிதப் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட இடத்திலிருந்து உடனடியாக வெளியேறுமாறு மக்களுக்கு அறிவிப்பு
இலங்கையில் தம்புள்ளை நகருக்கு அருகிலுள்ள பாதெனிய நகரில் பௌத்த புனிதப் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட ஒரு இடத்தில் வாழ்பவர்கள், மாற்றுக் காணியோ அல்லது நஷ்ட ஈடோ வாங்கிக்கொண்டு அப்பிரதேசங்களில் இருந்து காலிசெய்ய வேண்டும் என்ற ஒரு உடன்பாடு சில காலம் முன்பு எட்டப்பட்டிருந்தது. இக்குடும்பங்களை திங்களன்று அழைத்துப் பேசிய மாதளை மாவட்ட அரசாங்க அதிபர், மாற்றுக் காணியோ நஷ்ட ஈடோ கேட்காமல் உடனடியாக இடத்தை விட்டு அகலவேண்டும் என்று தெரிவித்ததாக ஒரு சில குடும்பங்கள் கூறுகின்றன.
உடனடியாக இடத்தை விட்டு அகல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டதாகக் கூறும் சில பாதெனிய வாசிகள் கருத்து வெளியிடுகையில், ஒவ்வொரு ஆளுக்கும் ஒவ்வொரு நியாயம் என்பதுபோல அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாகக் குற்றம்சாட்டினர்.
இப்பகுதியில் வாழும் சிங்கள குடும்பங்கள் சிலவற்றுக்கு மாற்றுக் காணி வழங்குவதாக அதிகாரிகள் திங்களன்று தெரிவித்துள்ளனர் என்று தாம் கேள்விப்பட்டதாக அவர்கள் கூறினர்.
மாற்றுக் காணியோ நஷ்ட ஈடோ வழங்கப்படும் என உத்திரவாதம் அளிக்கும் ஆவணங்களைக் காட்டியபோதும், உத்தரவாதம் கொடுத்தவர்களிடம் போய் வாங்கிக்கொள்ளுங்கள் என அதிகாரிகள் கூறிவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
பல கலமாக தாங்கள் இப்பகுதியிலேயே வாழ்ந்துவருவதாகக் கூறும் இவர்கள், ஏற்கனவே நடந்த உடன்பாட்டின்கீழ் தமக்கு மாற்றுக் காணியோ நஷ்ட ஈடோ கிடைக்குமானால் இப்பகுதியிலிருந்து வெளியேறுவதற்கு தாம் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.
பாதெனிய வாசிகள் தெரிவிக்கும் இந்தக் குற்றச்சாட்டு பற்றி மாதளை அரசாங்க அதிபரின் பதிலைப் பெற பிபிசி பலமுறை முயன்றும் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்பதை நேயர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறோம்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply