முன்னாள் போராளிகளின் பொருளாதார சமூக நலன் குறித்து அரசு கவனம்

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் புலி உறுப்பினர்களில் பலர் இலங்கையில் வாழ முடியாமல் வெளிநாடுகளில் புகலிடம் பெற முயல்வதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் தர்சன ஹெட்டியாரச்சி முழுமையாக நிராகரித்தார். புனர்வாழ்வு பெற்று வெளியேறிய முன்னாள் புலி உறுப்பினர்களின் நலன்கள் குறித்து புனர்வாழ்வு ஆணையாளர் அலுவலகம் தொடர்ந்து கவனிப்பதாக கூறிய அவர், இவர்களில் எவரிடமிருந்தும் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக முறைப்பாடு எதுவும் கிடைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இராணுவ கெடுபிடி மற்றும் அழுத்தங்கள் காரணமாக முன்னாள் புலிகள் வெளிநாடுகளில் புகலிடம் கோரி வருவதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்து வினவியதற்குப் பதிலளித்த புனர்வாழ்வு ஆணையாளர், புனர்வாழ்வு பெற்ற முன்னாள் புலி உறுப்பினர்களை படையினர் கண்காணிப்பதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை நிராகரித்தார்.

படையினரிடம் சரணடைந்த மற்றும் கைதான முன்னாள் புலி உறுப்பினர்களில் 11,593 பேர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். மேலும் சுமார் 350 பேரே புனர்வாழ்வு பெற்று வருகின்றனர்.

புனர்வாழ்வளிக்கப்படும் காலத்தில் அனைவருக்கும் பல்வேறு சுயதொழிற் பயிற்சி வழங்கப்பட்டு தொழில் செய்ய தேவையான அறிவும் அனுபவமும் வழங்கப்படுகிறது. சமூகத்தில் இணைக்கப்பட்ட பின்னர் அவர்களுக்கு சுயதொழில் புரியவும் வீடு கட்டவும் கடனுதவி வழங்கப்படுகிறது.

3800 பேருக்கு சிவில் பாதுகாப்புப் பிரிவில் தொழில் வழங்கப்பட்டுள்ளதோடு தனியார்த் துறையில் தொழில் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

புனர்வாழ்வு பெற்று சமூகத்தில் இணைக்கப்பட்டவர்கள் குறித்து கவனிக்கவென வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள சகல அரச அதிபர் அலுவலகங்களிலும் புனர்வாழ்வு ஆணையாளர் அலுவலக உப அலுவலகங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதனூடாக புனர்வாழ்வு பெற்ற புலிகளின் பொருளாதார சமூக நலன் குறித்து கவனிக்கப்படுகிறது.

ஆனால் இந்த அலுவலகங்களுக்கு எந்த ஒரு முன்னாள் புலி உறுப்பினரும் எதுவித முறைப்பாடும் தெரிவித்ததாக அறிவிக்கப்படவில்லை. அவ்வாறு முறைப்பாடுகள் கிடைத்தால் தேவையான உதவிகள் வழங்கப்படும்.

வெளிநாட்டில் தொழில் பெறுவதற்காகவே சிலர் இவ்வாறு பொய்க் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர். புனர்வாழ்வு பெற்ற முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு தேவையான சகல உதவிகளும் வசதிகளும் வழங்கப்படுகிறது.

4 வீத மிகக் குறைந்த வட்டியுடன் சுயதொழில் புரிவதற்காக 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வரை கடனுதவி வழங்கப்படுவதோடு இதுவரை 2 ஆயிரம் பேருக்கு சுயதொழில் கடன் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply