கிழக்கு மாகாண சபையில் அரசாங்கத்தின் அதிகார பலத்தில் பிளவுகள் ஏற்படும் நிலைமை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதிகாரத்தில் இருக்கும் கல்முனை மாநகர சபையினால் நிர்மாணிக்கப்பட்ட நூலகம் ஒன்றை திறந்து வைத்தமை தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸூக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சினை காரணமாக கிழக்கு மாகாண சபையில், அரசாங்கத்தின் அதிகார பலத்தில் பிளவுகள் ஏற்படும் நிலைமை உருவாகியுள்ளது.

கல்முனை மாநகர சபை முதல்வர் சிராக் மீரா சாயிபினால் கல்முனை நகரில் நிர்மாணிக்கப்பட்ட நூலகத்தை திறந்து வைப்பதை கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜிப் ஏ. மஜீட் தடைவிதித்துள்ளதும், தடைவிதிக்கப்பட்ட தினத்திற்கு மறுதினம் கடந்த 24 ஆம் திகதி அந்த நூலகத்தை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் திறந்து வைத்ததுமே இந்த அரசியல் நெருக்கடி ஏற்படுவதற்கு காரணமாக அமைந்துள்ளது.

கிழக்கு மாகாண சபையில், ஆளும் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களிடம் ஆதரவுடனேயே ஆட்சி அதிகாரத்தில் இருந்து வருகிறது. முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் மாகாண சபையில் அமைச்சர்களாக இருந்த போதிலும் முதலமைச்சர் மாத்திரமல்லாது, அமைச்சரவையில் உள்ள சில அமைச்சர்கள், மாற்றாந்தாய் மனபான்மையுடன் நடந்து கொள்வதாகவும்  முஸ்லிம் காங்கிரஸ் அமைச்சர்களின் அமைச்சு விடயங்களில் தேவையற்ற தலையீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குற்றம் சுமத்தப்படுகிறது.

இந்த பிரச்சினை குறித்து முஸ்லிம் காங்கிரஸ்  ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாரான நிலையில், முதலமைச்சருடன் பேச்சு நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என காங்கிரஸின் அதியுயர் பீடம் தீர்மானித்திருந்தது.  இதனடிப்படையில் முதலமைச்சருடன் பேச்சு நடத்தப்பட்ட போதிலும்  இன்னும் தீர்வுகள் கிடைக்கவில்லை என முஸ்லிம் காங்கிரஸின் தகவல்கள் தெரிவித்தன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply