இலங்கை – தாய்லாந்து நான்கு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள தாய்லாந்து பிரதமர் யின்லக் ஷினவாத்ராவுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று செங்கம்பள வரவேற்பளித்து கெளரவித்தார். இரு நாட்டுத் தலைவர்களுக்குமிடையில் நேற்று இரு தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றதுடன் இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத்துறை, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளின் மேம்பாடு தொடர்பில் நான்கு முக்கிய ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டன.

தாய்லாந்து பிரதமரின் வருகையையொட்டி ஜனாதிபதி செயலகப் பிரதேசம் இலங்கை, தாய்லாந்து தேசியக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்ததுடன் பழைய பாராளுமன்ற முன்றலில் அமைக்கப்பட்டிருந்த விசேட மேடையில் வரவேற்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நேற்றுக் காலை ஜனாதிபதி செயலகத்தை வந்தடைந்த தாய்லாந்துப் பிரதமர் யின்லக் ஷினவாத்ராவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வரவேற்றார். தாய்லாந்து பிரதமரைக் கெளரவிக்கும் வகையில் 21 கெளரவ பீரங்கி வேட்டுகள் தீர்க்கப்பட்டு இராணுவ அணி வகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

அதனையடுத்து ஜனாதிபதி செயலகத்தில் இரு நாட்டுத் தலைவர்களுக்கிடையில் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன் போது இருநாடுகளுக்கும் முக்கியமான பல்வேறு விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டன.

இரு நாடுகள் தொடர்பிலான பேச்சுவார்த்தைகளில் வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் உட்பட அமைச்சர்களும் தாய்லாந்து பிரதிப் பிரதமர் உட்பட அந் நாட்டின் அமைச்சர்களும் தூதுக்குழுவினரும் கலந்துகொண்டனர்.

இப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் இருநாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த நான்கு உடன்படிக்கைகள் இரு நாட்டுத் தலைவர்கள் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டன.

இரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ கடவுச் சீட்டுக்களை வைத்திருப்போருக்கு விசா விலக்களிப்பு சம்பந்தமான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ¤ம் தாய்லாந்து அரசாங்கத்தின் சார்பில் அந் நாட்டின் பிரதிப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான சுரபோங் டொலிச்சாக் சய்ருல்லும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

இதனையடுத்து மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

இரு நாடுகளுக்குமிடையில் சுற்று லாத்துறை மேம்பாட்டு ஒத்துழைப் புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ¤ம் தாய்லாந்து அரசாங்கத்தின் சார்பில் அந்நாட்டின் பிரதிப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான சுரபோல் டொலிச்சாக்சய்ருல்லும் கைச்சாத் திட்டனர்.

தாய்லாந்து விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சுக்கும் இலங்கை தொழில் நுட்பம், ஆராய்ச்சி மற்றும் அணு சக்தி அமைச்சுக்குமிடையில் விஞ்ஞான தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதில் இலங்கையின் சார்பில் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் தாய்லாந்து அரசாங்கத்தின் சார்பில் அந்நாட்டுப் பிரதிப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான சுரபோல்பொலச்சாக்சக்ருல் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

இதனையடுத்து இலங்கையின் வர்த்தக சம்மேளனத்துக்கும் தாய்லாந்தின் வர்த்தக கைத்தொழில் மற்றும் வங்கித்துறை கூட்டிணைந்த குழுவுக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது.

இதில் இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பிரதித் தலைவர் சுரேஷ் ஷாவும் தாய்லாந்து வர்த்தக, கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் பெயுர்சட் சர்டி சுட்போலும் கைச்சாத்திட்டனர்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வுகளில் பிரதமர் டி. எம். ஜயரட்ண, அமைச்சர்கள் பஷில் ராஜபக்ஷ, டக்ளஸ் தேவானந்தா, ரிசாட் பதியுதீன், பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், ராஜித சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க, பிரியங்கர ஜயரத்ன, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

நேற்றைய தினம் முற்பகல் 11.00 மணியளவில் விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த தாய்லாந்துப் பிரதமர் யின்லக் ஷினவாத்ராவை வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தலைமையிலான குழுவினர் வரவேற்றனர்.

தாய்லாந்து பிரதமருடன் அந்நாட்டின் பல்வேறு துறைகள் சார்ந்த தூதுக்குழுவினரும் இலங்கை வந்துள்ளனர். தாய்லாந்துப் பிரதமர் இலங்கையில் தங்கியுள்ள நாட்களில் முக்கிய அரசியல் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தைகளை மேற் கொள்ளவுள்ளார்.

அவர் நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் விசேட உரை நிகழ்த்தியமையும் குறிப் பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply