சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆக அதிகரிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக திடீரென வீசிய கடும் காற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது. இவற்றில் 41 மீனவர்களும் மேலும் இருவரும் அடங்குவர். இதேவேளை கடலில் காணாமல் போன மீனவர்களின் சடலங்கள் கரை ஒதுங்கிய வண்ணம் உள்ளன. கொழும்பு மற்றும் தெற்கு கரையோர பிரதேசங்களில் நேற்றைய தினம் மாத்திரம் 17 ற்கும் அதிகமான சடலங்கள் கரையொதுங்கியுள்ளதாக அந்த நிலையம் மேலும் தெரிவித்தது.

பம்பலபிட்டி, அஹுங்கல்ல, அம்ப லாங்கொட, காலி, பெந்தோட்டை ஆகிய பிரதேசங்களில் கரையொதுங்கிய நிலையிலேயே இந்த சடலங்கள் மீட் டெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய அஹுங்கல்ல, அம்ப லாங்கொட பிரதேசங்களில் 14 சடலங்களும், பம்பலபிட்டி பிரதேசத்தில் 2 சடலங்களும், பெந்தோட்டை பிரதேசத்தில் 1 சடலமும் கரையொதுங்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்தச் சம்பவத்தில் 29 மீனவர்கள் காயமடைந்துள்ளதுடன், 20 மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். இவ்வாறு கடலில் காணாமல் போன வர்களை தொடர்ந்தும் தேடிக் கண்டுபிடிக்கும் பணிகளில் கடற்படையினரும், பாதுகாப்புப் படையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை சீரற்ற காலநிலை மற்றும் திடீரென வீசிய கடும் காற்றினால் புத்தளம் பிரதேசத்தில் நீரில் மூழ்கி ஒருவரும், இரத்தினபுரி பிரதேசத்தில் வீடொன்றின் மீது மரம் விழுந்ததில் ஒருவரும் உயிரிழந்துள்ளதுடன் 557 குடும்பங்களைச் சேர்ந்த 1433 பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் பேச்சாளர் சரத் லால்குமார தெரிவித்தார்.

அத்துடன், 2345 வீடுகள் சேதமடைந்துள்ளன. இவற்றில் 107 வீடுகள் முற்றாகவும், 2238 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேநேரம், பாதிக்கப்பட்டவர்களில் 24 குடும்பங்களைச் சேர்ந்த 107 பேர் நான்கு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கென நுவரெலியாவில் 3 முகாம்களும், இரத்தினபுரியில் ஒரு முகாமும் அமைக்கப்பட்டுள்ளன.

ஒரே தினத்தில் பெரும் எண்ணிக்கை யிலான சடலங்கள் கரை ஒதுங்கியதை அடுத்து கரையோர பிரதேசம் எங்கும் நேற்று பெரும் பரபரப்பு நிலை காணப்பட்டன.

அனர்த்தம், இடம்பெற்று மூன்று தினங்கள் சென்றுள்ள நிலையில் மீனவர்கள் கரைக்குத் திரும்பாததனாலும், கண்டுபிடிக்கப்படாமையினாலும் காணாமல் போயுள்ள எஞ்சியுள்ள மீனவர்களும் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது. இவ்வணர்த்தத்தில் சடலமாக மீட்டெடுக்கப்பட்ட மீனவர்களின் சிலரது இறுதிக் கிரிகைகள் நேற்று நடைபெற்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply