பத்தொன்பதாவது திருத்தம் 13இன் சாவு மணியாகும் :ஜனநாயக மக்கள் முன்னணி

பத்தொன்பதாவது திருத்தம் நிறைவேறினால் அதுவே 13ஆவது திருத்தத்திற்கு சாவு மணியாக அமைவதோடு தமிழர்களின் உரிமைகளை ஒழிப்பதற்கும் வாசலாக அமையும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் உதவிப்பொதுச் செயலாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சண்.குகவரதன் தெரிவித்தார்.எனவே 13ஆவது திருத்தத்தை பாதுகாக்க வேண்டியது இந்தியாவின் கடப்பாடாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கொழும்பு மாநகர சபை உறுப்பினரும் திட்டமிடல் அபிவிருத்தி மற்றும் சுகாதாரம் பொதுவசதிகள் தொடர்பான நிலையியற் குழுக்களின் தலைவருமான சண். குகவரதன் மேலும் தெரிவித்திருப்பதாவது,

13ஆவது திருத்தம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு முழுமையான அரசியல் தீர்வை வழங்காது. ஆனால் அவ்வாறான தீர்வொன்றை பெற்றுக் கொள்வதற்கான வழியாக இத்திருத்தம் அமைந்துள்ளது.

எனவே அரசியல் தீர்வுக்கான வழியை மூடுவதற்கான முதல் நடவடிக்கையை 19ஆவது திருத்தம் மூலம் அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. இந்திய – இலங்கை உடன்படிக்கையில் வட கிழக்கு இணைந்த அதிகாரப் பரவலே வலியுறுத்தப்பட்டுள்ளது. அதனையே ஒழிப்பதற்கு அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. எதிர்காலத்தில் இந்த ஆரம்பம் 13ஆவது திருத்தத்தை முழுமையாக ஒழிப்பதற்கும் சாதகமாக அமையும். பத்தொன்பது 13இன் சாவுமணியாக அமையும்.

எனவே 13 என்ற பிள்ளை இவ்வுலகிற்கு ஜனனமாக காரணமாகயிருந்த இந்தியா இதனை பாதுகாப்பதற்கு ராஜதந்திர ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழ் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு விசேடமாக வடக்கு கிழக்கு மக்கள் அடிமைகளாக்கப்படும் ஆபத்து எம் முன்னே உள்ளது என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply