அவசர நிலையை பிரகடனப்படுத்தி தேசத் துரோகம்: முஷரப் மீது பாகிஸ்தான் கோர்ட்டில் புது வழக்கு
ராணுவ ஆட்சியாளராக இருந்த பர்வேஷ் முஷரப், பெனாசிர் கொலை வழக்கில் கைது நடவடிக்கையிலிருந்து தப்பித்து வெளிநாடுகளில் வாழ்ந்து வந்தார். சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பொருட்டு அவர் பாகிஸ்தான் வந்தார்.இதைத்தொடர்ந்து அவர் தேர்தலில் போட்டியிட நீதிமன்றம் தடைவிதித்தது. மேலும் கடந்த 2007-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை, 2006-ல் பலூசிஸ்தான் தேசியவாத தலைவர் அக்பர் பக்தி கொலை மற்றும் 2007-ம் ஆண்டு அவசர நிலை பிரகடனம் உள்ளிட்ட வழக்குகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட முஷரப் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
அனைத்து வழக்குகளிலும் ஜாமின் பெற்ற முஷரப், சமீபத்தில் வீட்டு சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். ஆனால் கோர்ட் அனுமதியில்லாமல் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளக்கூடாது என்று நீதிமன்றம் நிபந்தனை விதித்தது.
இந்நிலையில், பர்வேஷ் முஷரப் வெளிநாடு செல்ல அரசு விதித்துள்ள தடையை நீக்க வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் ஏ.கியூ. ஹேல்பொடோ, சிந்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
அந்த மனுவில், துபாயில் உள்ள தனது 95 வயதான தாயாரின் உடல்நிலை குறித்து அறிய முஷரப் அங்கு செல்லவேண்டும் என்றும், இதற்காக பாகிஸ்தானை விட்டு செல்லக்கூடாது என்று விதிக்கப்பட்ட அரசின் கெடுபிடியை தளர்த்தி உத்தரவிடுமாறும் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், இது தொடர்பாக 18-ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு துணை தலைமை வழக்கறிஞர், சிந்து மாகாண தலைமை வழக்கறிஞர் மற்றும் அரசுத்தரப்பு வழக்கறிஞர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
இந்நிலையில், பாகிஸ்தானில் அரசியலமைப்பு சட்டத்தை மீறிய வகையில் 2 முறை அவசர நிலையை பிரகடனப்படுத்திய குற்றத்துக்காக முஷரப் மீது இன்று புதிய வழக்கு தொடரப்படும் என உள்துறை மந்திரி சவுத்ரி நிசார் அறிவித்துள்ளார்.
இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறைந்தபட்சமாக ஆயுள் தண்டனையோ, அதிகபட்சமாக மரண தண்டனையோ விதிக்கப்படலாம் என சட்ட வல்லுனர்கள் கூறுகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply