மஹிந்த சிந்தனையையும் செயற்பாடுகளையும் நிறைவேற்ற வேண்டிய தேவை எமக்கு இல்லை : விக்கினேஸ்வரன்
வடமாகாண சபையில் தாங்கள் செயற்பட முடியாத வகையில் பல்வேறு முட்டுக்கட்டைகள் போடப்படுவதாகவும், வடமாகாண சபையின் அலுவலகத்தில் பணியாற்றுகின்ற அலுவலர்களினாலேயே இந்த முட்டுக்கட்டைகள் ஏற்பட்டிருப்பதாகவும் முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார். மஹிந்த சிந்தனையை முன்வைத்து வடமாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டவர்களை மக் கள் நிராகரித்துவிட்டனர். மஹிந்த சிந்தனை என்ற தனிப்பட்ட ஒருவருடைய சிந்தனையையும் செயற்பாடுகளையும் நிறைவேற்ற வேண்டும் என்ற தேவை எங்களுக்கு கிடையாது என்றும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.
வடமாகாண சபை பதவியேற்று இரண்டு மாதங்களாகின்றன. இந்த நிலையில் அந்த சபையின் செயற்பாடுகளில் என்ன வகையான முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என கேட்டபோதே முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
வவுனியா பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் அழைப்பின் பேரில் கிராமிய அபிவிருத்தி வங்கிக்கிளையொன்றை திறந்து வைப்பதற்காக நேற்று முன்தினம் சனிக்கிழமை முதலமைச்சர் விக்கினேஸ்வரன் வவுனியாவுக்கு வருகை தந்திருந்தார்.
வவுனியா குடியிருப்பு பிள்ளையார் கோவிலில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாட்டில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், வினோநோகராதலிங்கம், மாகாண சபை உறுப்பினர்களான இந்திரராஜா, தியாகராஜா மற்றும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத் தலைவர் சுப்பிரமணியம், சிக்கன கடனுதவி கூட்டுறவுச்சங்கத் தலைவர் நா.சேனாதிராஜா, கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் மற்றும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க அதிகாரிகள் பணியாளர்கள் என பலதரப்பட்டவர்களும் கலந்து கொண்டனர்.
பூஜை வழிபாட்டின் பின்னர் மலர் மாலை அணிவித்து நாதசுர மேளதாளங்கள் சகிதம் விருந்தினர்கள் ஊர்வலமாக வவுனியா நகர வீதி வழியாக அழைத்துச் செல்லப்பட்டனர். குடியிருப்பு வீதிச் சந்தியில் மொத்த விற்பனைச் சந்தைக்கு எதிரில் வவுனியா நகர வர்த்தக சங்கத் தலைவர் ரீ.கே.இராஜலிங்கம் மற்றும் முக்கியஸ்தர்கள், முதலமைச்சருக்கு மலர் மாலை சூட்டி, பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். அதேபோன்று மொத்த விற்பனைச் சந்தை வர்த்தகர்களும் முதலமைச்சரையும் உடன் வருகை தந்த விருந்தினர்களையும் வரவேற்றனர்.
பள்ளிவாசல் சந்தியில் முஸ்லிம் பிரமுகரும் வர்த்தகருமாகிய ஆரிப் மற்றும் பள்ளிவாசல் சபையினர் முதலமைச்சருக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்று பள்ளிக்குள் அழைத்துச் சென்று கௌரவமளித்தனர்.
இதனையடுத்து பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் கிராமிய வங்கிக் கிளையொன்றை முதலமைச்சர் நாடாவெட்டி திறந்து வைத்து வங்கி நடவடிக்கைகளை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார். அதனையடுத்து அங்கு நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றினார்.
பின்னர் அவர் வவுனியா நூலகத்திற்குச் சென்று நூலகத்தைப் பார்வையிட்டார். அப்போதுஇ அவரிடம் வடமாகாண சபையின் செயற்பாடுகள் குறித்து கேட்டபோதேஇ மேற்கண்டவாறு பதிலளித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
வடமாகாண சபையின் செயற்பாடுகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கின்றது எனக் கூற முடியாதிருக்கின்றது. ஏனென்றால் நாங்கள் அங்கு செயற்பட முடியாதவாறு முட்டுக்கட்டைகள் போடப்படுகின்றன. குறிப்பாக அங்கு பணியாற்றுகின்ற அலுவலர்களினாலேயே இந்த முட்டுக்கட்டைகள் போடப்படுகின்றன. இதுதான் பிரச்சினையாக இருக்கின்றது.
மத்திய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டவர்களே அலுவலர்களாக கடமையாற்றுகின்றார்கள். அவர்கள் இதுகால வரையிலும் ஆளுனரின் சொற்படி, அவருடைய ஆணைக்குக் கட்டுப்பட்டு பணியாற்றி வந்துள்ளார்கள். இப்போது நாங்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் செயற்படும்போது, ஆளுனரின் அனுமதியைப் பெற வேண்டும், அவருடைய அனுமதியில்லாமல் செயற்பட முடியாது என்று முட்டுக்கட்டை போடுகின்றார்கள்.
நாங்களாக ஏதேனும் பணிகளைச் செய்தாலும், அவற்றிற்கு ஆளுனரின் அனுமதி பெறப்பட வேண்டும் என்று குழப்புகின்றார்கள். இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவின் கவனத்திற்கு நாங்கள் கொண்டு வந்துள்ளோம். அவர் இதுபற்றி ஜனாதிபதியுடன் பேசி ஒரு தீர்வு காண்பதாக உறுதியளித்திருக்கின்றார்.
ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைமை
யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதுபற்றி அதிகாரிகள் எங்களிடம் கலந்து பேசவில்லை. அழைப்பு மாத்திரம் அனுப்பப்பட்டிருந்ததுஇ மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு தலைமையின் கீழ் இந்தக் கூட்டம் நடத்தப்படவேண்டும். அவ்வாறிருக்கையில் அந்த அதிகாரிகள் ஜனாதிபதியின் எந்த அறிவித்தலுக்கமைய செயற்படுகின்றார்கள் என்பதைத் தெரிவிக்குமாறு நாங்கள் கோரியிருந்தோம். கூட்டத்தில் நாங்கள் கலந்து கொள்ளவில்லை.
இந்த நிலையில் ஒருங்கிணைப்பு அபிவிருத்திக்குழு கூட்டத்திற்கு என்னையும் ஒரு இணைத்தலைமையாக நியமித்து ஜனாதிபதி அனுப்பி வைத்த கடிதம் வந்து கிடைத்திருக்கின்றது.
அந்தக் கடிதத்தில் மஹிந்த சிந்தனையின் அடிப்படையிலான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்காக இந்த இணைத்தலைமை வழங்கப்படுவதாகவும்இ இந்தக் கூட்டத்தில் மஹிந்த சிந்தனையைச் செயற்படுத்துகின்ற அதிகாரிகள் கலந்து கொண்டு செயற்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மஹிந்த சிந்தனையை முன்வைத்து வடமாகாண தேர்தலில் போட்டியிட்டவர்களை மக்கள் நிராகரித்திருக்கின்றார்கள். நாங்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள். மஹிந்த சிந்தனை என்ற தனிப்பட்ட ஒருவருடைய சிந்தனையையும் செயற்பாடுகளையும் நிறைவேற்ற வேண்டும் என்ற தேவை எங்களுக்குக் கிடையாது.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு சபை இருக்கும்போது, அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக மத்திய அரசாங்கத்தைச் சேர்ந்த ஒருவரை இந்தக் கூட்டத்திற்குத் தலைமைத்துவம் வழங்கிச் செயற்பட வேண்டிய தேவை என்ன என்பதும் தெரியாமல் இருக்கின்றது.
தமது மக்களுக்குப் பல தேவைகள் இருக்கின்றன. அவற்றை நிறைவேற்ற வேண்டிய கடமைகள் இருக்கின்றன. ஆனால் மக்களுடைய தேவைகளை அரசியலாக்கிச் செயற்படுவதை ஏற்க முடியாது. ஜனாதிபதியினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பல விடயங்களுக்கு விளக்கம் தேவைப்படுகின்றது. எனவே இந்தக் கூட்டம்பற்றியும்இ இணைத் தலைமை பற்றியும் என்னை அழைத்துப் பேசியிருந்தால் அந்த விளக்கங்களை நான் கேட்டிருப்பேன். எனவே கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றிற்குரிய விளக்கங்களைப் பெறாமல் எதனையும் செய்ய முடியாது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply