இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க கூடாது :தி.மு.க. தலைவர் கருணாநிதி
மத்திய அரசு அக்கறை காட்டுகிறதோ இல்லையோ, ஈழத்தமிழர்களின் பிரச்சினை என்றாலே, அது தீருவதாக இல்லை. மீனவர்கள் பிரச்சினையாக இருந்தாலும், அகதிகள் பிரச்சினையாக இருந்தாலும், இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவிலே பயிற்சி கொடுப்பதாக இருந்தாலும் இந்த ஆட்சியில் எதுவும் முறையாகவோ, முழுமையாகவோ தீர்க்கப்பட்டதாகத் தெரியவில்லை.அதன் காரணமாக வேதனைகள் தீரவில்லை; அவை தொடர்ந்து தரும் துன்பமும் மாறவில்லை. திராவிட முன்னேற்றக் கழகமும் தன்னால் இயன்ற அளவிற்கு என்னென்ன செய்ய முடியுமோ, அவற்றையெல்லாம் இலங்கைத் தமிழர்களின் நலனை மனதிலே கொண்டு தொடர்ந்து செய்து கொண்டுதான் உள்ளது.
1956ஆம் ஆண்டு முதல் ஆட்சியிலே இருந்தாலும், இல்லாவிட்டாலும், ஈழத் தமிழர்களுக்காக ஓயாது ஓங்கிக் குரல் கொடுத்து வருகிறோம் என்பதை உண்மையை நேசிப்பவர்கள் உணர்ந்தே இருப்பார்கள்.
நமது பல்வேறு கோரிக்கைகளுக்கு இந்திய அரசு உதவிட முன்வருவதாக உறுதி கூறிய போதிலும், உலக நாடுகளின் மத்தியில் நடுநிலை நாடுகளில் ஒன்று இந்தியா என்ற பெயரைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, சிலவற்றில் விட்டுக் கொடுத்துப் போகிறதோ என்று சிலர் சந்தேகம் கொள்ளக் கூடிய அளவிலேதான் செயல்படுகிறது.
அதற்கு உதாரணம் தான், இலங்கைத் தமிழர்களைக் கொல்வதற்குக் காரணமாக இருக்கும் இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவிலே எந்தப் பகுதியிலும் பயிற்சி அளிக்கக் கூடாது என்பதுதான் தமிழகத்திலே உணர்வுள்ள தமிழர்களின் கோரிக்கை, வேண்டுகோள். அந்த வேண்டுகோளை இந்திய அரசிடம் நாம் பலமுறை விடுத்து விளக்கியுள்ளோம்.
நாம் மாத்திரமல்ல; தமிழகத்திலே உள்ள அரசின் சார்பில் முதலமைச்சரும் பிரதமருக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். தமிழகத்திலே உள்ள மற்றக் கட்சிகளும் அதற்காகக் குரல் கொடுத்த போதிலும், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை இந்தச் செய்தி, அதாவது இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியா பயிற்சி அளிக்கும் செய்தி வந்து கொண்டு தான் இருக்கிறது.
தற்போது இலங்கைக் கடற்படைக்கு பயிற்சி அளிக்க இந்தியா மீண்டும் விருப்பம் தெரிவித்துள்ளது. இலங்கை ஜனாதிபதியிடம் இந்தத் தகவலை இந்தியக் கடற்படை தளபதி டி.கே. ஜோஷி நேரில் தெரிவித்திருக்கிறார்.
சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக இலங்கை சென்ற டி.கே. ஜோஷி, இலங்கைக் கடற்படை அதிகாரிகளுக்கு நான்கு ஆண்டு கால இளநிலை தொழில் நுட்ப கல்வி குறித்த பயிற்சி அளிப்பதற்கு இந்தியக் கடற்படை தயாராக இருப்பதாக ராஜபக்ஷவிடம் நேரில் தெரிவித்திருக்கிறார்.
எங்களுடைய கோரிக்கை, இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவில் எந்த மாநிலத்திலும் பயிற்சியளிக்கக் கூடாது என்பது தான். ஆனால் மத்திய அரசு இந்த வேண்டுகோளைக் கூட ஏற்க முன்வரவில்லை. கேட்டால், இலங்கை நட்பு நாடு என்று சொல்கிறார்கள்.
இந்தியா நட்பு நாடு என்றால், தமிழ்நாடு இந்தியாவிற்குள் இருக்கும் ஒரு மாநிலம் இல்லையா? அந்த மாநில மக்களின் உணர்வுகளுக்கு முதல் இடம் தந்து சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? இலங்கையை இந்தியா நட்பு நாடாகக் கருதுகின்ற நேரத்தில், இலங்கை இந்தியாவை நட்பு நாடாகக் கருத வேண்டாமா? இந்திய அரசின் குரலுக்கு இலங்கை மதிப்பளிக்கிறதா?
கடந்த வாரம் ராஜபக்ஷவின் சகோதரர், கோட்டாபய ராஜபக்ஷ டெல்லி வந்து, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரும், காமன்வெல்த் மாநாட்டிற்காக இலங்கை சென்றவருமான சல்மான் குர்ஷித் உட்பட பலரைச் சந்தித்து இரண்டு நாடுகளும் கடற்படை உறவுகள் மற்றும் ஒத்துழைப்புகள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து இந்திய அரசு தமிழ்நாட்டு மக்களின் நலனை விட, இலங்கையின் நட்பு தான் அவசியம் என்று கருதுகிறதோ என்ற அய்யப்பாடு தமிழ் மக்களிடையே எழுகிறது.
இதை மனதிலே கொண்டு, இனியாவது இந்திய அரசு தமிழர்களும் இந்திய நாட்டு மக்களே என்ற எண்ணத்தோடு, அவர்களின் உணர்வுகளுக்கு உரிய மதிப்பளித்திட வேண்டுமென்று வலியுறுத்துவதோடு, அதற்கு அடையாளமாக தற்போது இலங்கைக் கடற்படையினருக்கு ராணுவ பயிற்சி அளிக்க முன்வந்துள்ள முடிவினைத் திரும்பப் பெற்று, அதனை வெளிப்படையாக அறிவிக்க முன் வர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply