மீனவர்கள் பற்றி ராஜபக்சேவுடன் பேசாதது ஏன்?: பிரதமருக்கு ஜெயலலிதா கண்டனம்

ராஜபக்சேவுடன் தமிழக மீனவர் பிரச்சினை பற்றி பிரதமர் மன்மோகன்சிங் பேசாததற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்து உள்ளார். நாகை பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் கோபாலை ஆதரித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரம் செய்வதற்காக நாகை அவுரித்திடலில் மேடை அமைக்கப்பட்டு இருந்தது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா மேடைக்கு நேற்று பிற்பகல் 2.20 மணிக்கு வந்தார். அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், உள்ளிட்ட அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். முன்னதாக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பூர்ணகும்ப மரியாதை வழங்கப்பட்டது.

மேடையில் நின்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா மக்களை பார்த்து இரட்டை விரலை காண்பித்து கை அசைத்தார். மக்கள் அனைவரும் உற்சாகத்தில் கை அசைத்தனர்.

பின்னர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:-

தமிழக மீனவர்கள் அன்றாடம் தங்களது மீன்பிடி தொழிலை மேற்கொள்ள சாத்தியமான ஒரு தீர்வினை காணும் பொருட்டு 27-1-2014 அன்று சென்னையில் தமிழக மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை நடைபெற நான் ஏற்பாடு செய்தேன். இந்த பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கு முன்பு இலங்கை சிறைகளில் வாடிக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினேன். எனது வலியுறுத்தலின் பேரில் தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இரு நாட்டு மீனவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் ஆக்கப்பூர்வமான முடிவு ஏற்பட வேண்டும் என்பதன் அடிப்படையில் இரு நாட்டு மீனவர்களுக்கு இடையேயான அடுத்த கட்ட பேச்சுவார்த்தை 13-3-2014 அன்று இலங்கையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற ஏதுவாக இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை இந்த பேச்சுவார்த்தைக்கு முன் இலங்கை அரசு விடுவிக்க வேண்டும் என்ற நிபந்தனையையும் எனது தலைமையிலான தமிழக அரசு விதித்துள்ளது.

இந்த பேச்சுவார்த்தைக்கான நாள் முடிவு செய்யப்பட்ட பின்னரும் இதனை சீர்குலைக்கும் வகையில் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து 8 படகுகளில் 3-3-2014 அன்று மீன்பிடிக்க சென்ற 30 தமிழக மீனவர்களையும், 2 காரைக்கால் மீனவர்களையும் இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது.

கடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர், இதுவரை 148 தமிழக மீனவர்கள் கடல் எல்லையை தாண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு உள்ளனர். இவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி நான் பாரத பிரதமருக்கு கடிதங்களை எழுதி உள்ளேன். இருப்பினும் இலங்கை அரசின் இந்த செயலை இந்திய அரசு கண்டிக்கவும் இல்லை; விடுவிக்க நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனது கடிதங்களுக்கு பாரத பிரதமர் பதிலும் அனுப்பவில்லை. நேற்றும், இன்றும் கூட 24 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் மியான்மரில் நடைபெற்ற மூன்றாவது வங்காள விரிகுடா நாடுகளின் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு முயற்சிகள் மாநாட்டில் இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் பாரத பிரதமர் மன்மோகன்சிங் கைகுலுக்கிய படம் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது.

தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கான என்ன நடவடிக்கையை இந்திய பிரதமர் எடுத்துள்ளார்?. தமிழ்நாட்டு மீனவர்கள் இந்திய குடிமக்கள் தான். எங்கள் இந்திய மீனவர்களை விடுதலை செய்யுங்கள். எங்கள் இந்திய மீனவர்களை சிறைபிடிப்பதை நிறுத்துங்கள் என்று கண்டிப்புடன் சொல்வதை விட்டுவிட்டு இலங்கை அதிபருடன் கை குலுக்குகிறார் பாரத பிரதமர். இப்படிப்பட்ட பிரதமர் தேவை தானா? இப்படிப்பட்ட காங்கிரஸ் ஆட்சி தேவைதானா?. தூக்கி எறிய வேண்டாமா?.

இலங்கை இனப்போரின்போது போர்க்குற்றங்கள் செய்த இலங்கை அரசுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழு முன்பு தீர்மானம் கொண்டுவர அமெரிக்கா இங்கிலாந்து உட்பட 5 நாடுகள் முன் வந்துள்ளன. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிய வேண்டிய தார்மீகப்பொறுப்புள்ள இந்தியா, பிற நாடுகளால் கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானத்தை முன்மொழிய முன் வரவில்லை. இப்படிப்பட்ட காங்கிரஸ் அரசு நமக்கு தேவை தானா?.

இந்த தமிழின விரோத மத்திய காங்கிரஸ் அரசை நீங்கள் இந்த தேர்தலில் தூக்கி எறிய வேண்டும் என்று உங்களை எல்லாம் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். மீனவர் பிரச்சினைக்கு மூல காரணமாக விளங்குவது கச்சத்தீவு பிரச்சினை. தமிழகத்தின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவை, அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு தாரைவார்த்த போது அதை தடுக்கத்தவறியது தி.மு.க. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதற்கு நிரந்தர தீர்வுகாண ஒரே வழி கச்சத்தீவினை மீட்பது தான் கச்சத்தீவு பகுதியில் நமக்குள்ள உரிமையை மீண்டும் நிலைநாட்டுவது தான். இதனை நிறைவேற்ற, வருகின்ற மக்களவை தேர்தலில் அ.தி.மு.க.விற்கு நீங்கள் முழுமையான ஆதரவு அளிக்க வேண்டும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசினார்.

இதைத்தொடர்ந்து மயிலாடுதுறை சென்ற முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அங்கு காளகஸ்திநாதபுரத்தில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் பாரதி மோகனை ஆதரித்து பேசினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply