அமைச்சர் பீரிஸின் ஜெனிவா உரையில் எவ்வித பயனுமில்லை : ஐ.தே.க.

ஜெனிவாவில் அமைச்சர் ஜி.எல்.பீரிஸின் உரையினால் எவ்வித பயனுமில்லை. சர்வதேசத்தின் பார்வையில் இலங்கை குற்றவாளியாகவே கருதப்படுகின்றதென்பது உறுதியாகிவிட்டது என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. மேலும் இலங்கை சர்வதேச ரீதியில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். இந்த சாதனையினை மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் நிகழ்த்தி விட்டது எனவும் அக்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியினால் நேற்று ஸ்ரீகொத்தாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போது ஐ.தே.க.வின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவினால் மேற்கண்ட கருத்து முன்வைக்கப்பட்டது.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் உயர் மட்டக் கலந்துரையாடலின் மூன்றாவது நாள் அமர்வில் நேற்று ஜெனிவாவிற்கான இலங்கை தூதுக்குழுவின் தலைவரும் வெளிவிவகார அமைச்சருமான ஜி.எல்.பீரிஸின் உரையானது சர்வதேசத்திடம் எடுபடவில்லை என்பதே உண்மை.

ஓர் நாட்டினை பிரதிபடுத்தி பேசும் உரையினை அந்த நாட்டினை ஆதரிக்கும் நாடுகள் வரவேற்க வேண்டும் எனவும் அமைச்சரின் உரையின் பின்னர் இலங்கையை ஆதரிக்கும் நாடுகள் கூட ஆதரிக்கவில்லை.

இலங்கை குற்றவாளி நாடு என்பது இன்று பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது. அமெரிக்காவினை எதிர்க்கும் ஒரே காரணமே அவர்கள் இலங்கை விடயத்தில் ஆதரவினை வழங்குகின்றனர் என்பதே உண்மையாகும். எனவே நேற்று அமைச்சர் பீரிஸின் உரையினால் நாட்டிற்கு எவ்விதப் பயனுமில்லை என்பது உண்மையாகி விட்டது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் ஆட்சியில் இலங்கை தனிமைப்படுத்தப்பட்டு விட்டது. உலகின் மோசமான நாடுகளின் வரிசையில் இலங்கையையும் உள்ளடக்கி விட்டனர். இன்று ஜெனிவா மாநாட்டின் இலங்கையின் பிரச்சினைகளை பரப்பி நாட்டினை சர்வதேச விசாரணைகள் வரையில் கொண்டு சென்றமைக்கு முழுப்பொறுப்பானது அரசாங்கமே கூற வேண்டும். அரசாங்கம் சர்வதேசத்தின் பிடியிலிருந்து தப்பிக்கொள்வதற்காக அவர்களின் உடன்படிக்கைகளை ஆதரித்து விட்டு தற்போது ஐக்கிய தேசிய கட்சியின் மீது குற்றம் சுமத்துவது முட்டாள் தனமாகும்.

ஐக்கிய தேசிய கட்சி அன்று ஆட்சியமைத்த போது எதிர்க்கட்சியின் சார்பில் மஹிந்த ராஜபக் ஷ நியாயம் கேட்டு ஜெனிவா சென்றிருந்தார். அப்போது நானும் அவருடன் துணை நின்றேன். ஆனால் இன்று அதே தவறை ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ செய்துள்ளார்.

இப்போதும் அரசாங்கத்திற்கு எதிராக நான் நியாயம் கேட்கின்றேன். இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுகின்றது என ஜெனிவாவில் குரல் எழுப்பிய மஹிந்த ராஜபக் ஷ இன்று ஜனாதிபதியாக மனித உரிமை மீறல்களை செய்து வருகின்றார். இவை மிகப்பெரிய அநியாயமாகும்.

மேலும் அரசாங்கம் எம்மை தேச துரோகிகள் என்று முத்திரை குத்தி மக்கள் மத்தியில் எம்மை குற்றவாளியாக்க முயற்சிக்கின்றனர்.

இன்று இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதை சுட்டிக்காட்டும் நாம் தேசத்துரோகிகள் என்றால் அன்று இலங்கை விடயத்தை ஜெனிவாவில் முறையிட்டு இலங்கை விடயத்தில் சர்வதேச விசாரணைகளை கோரிய மஹிந்த ராஜபக் ஷ யார்? அவரே இலங்கையை காட்டிக்கொடுத்த தேசத்துரோகியாவார். மக்கள் முதலில் அவரையே தண்டிக்க வேண்டும். அன்றும் சரி இன்றும் சரி நாட்டிற்குள் முடிக்க வேண்டிய பிரச்சினையினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ சர்வதேச ரீதியில் கொண்டு சென்றுள்ளார்.

அதே போல் இலங்கையின் வரலாற்றிலேயே நாட்டின் மீது சர்வதேச விசாரணைகளை மேற்கொள்ள வைக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். இந்த சாதனையை மஹிந்த

ராஜபக் ஷ அரசாங்கம் செய்துள்ளது. சர்வதேசத்தின் மத்தியில் இராணுவத்தினரையும் சிங்கள மக்களையும் குற்றவாளியாக மாற்றி நாட்டை சீரழித்துள்ளார்.

மக்களிடையே பொய்யான கதைகளைக் கூறி தேர்தலில் வாக்கு பெறும் சூழ்ச்சியினை ஐக்கிய தேசிய கட்சி முறியடிக்கும் என அவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply