மு.க.ஸ்டாலின் உள்பட 37 மாவட்ட செயலாளர்களுக்கு தங்க மோதிரம்: கருணாநிதி வழங்கினார்

சென்னையில் நேற்று நடைபெற்ற தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உள்பட 37 மாவட்ட செயலாளர்களுக்கு, கருணாநிதி தங்க மோதிரம் அணிவித்தார். தி.மு.க. தலைமையிலான ‘‘ஜனநாயக முற்போக்கு கூட்டணியில்’’ அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளோடு தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் முடிவடைந்தது. இதையடுத்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார்.

பொதுச்செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், தலைமை நிலைய செயலாளர் ஆற்காடு வீராசாமி, துணை பொதுச்செயலாளர்கள் துரைமுருகன், எஸ்.பி.சற்குணபாண்டியன் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தமிழகத்தில் இருந்து 31 தி.மு.க. மாவட்ட செயலாளர்களும், 4 மாவட்ட பொறுப்பாளர்களும், புதுச்சேரி, காரைக்கால் மாவட்ட செயலாளர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய ஆக்கப்பூர்வ பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் கடந்த 6-ந்தேதி நடைபெற்ற கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில், ‘கடந்த தமிழக சட்டசபை தேர்தலில் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு, தி.மு.க. மாவட்ட நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று’ குற்றச்சாட்டு எழுந்தது.

இதைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், கூட்டணி கட்சி வேட்பாளர்களை, நம் கட்சி வேட்பாளர்களாக நினைத்து அவர்களது வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்று கருணாநிதி கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.

தேர்தல் பிரசாரத்தின் போது யாருடைய மனமும் புண்படாத வகையில், கண்ணியத்தோடு நடந்து கொள்ள வேண்டும் என்றும், தி.மு.க. ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், சாதனைகளை மக்களிடம் நேரிடையாக எடுத்து சென்று வாக்குகளை திரட்ட வேண்டும் என்றும் மாவட்ட செயலாளர்களுக்கு கருணாநிதி வேண்டுகோள் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

தி.மு.க.வில் விருப்பமனு தாக்கல் செய்தவர்களில் யாரை வேட்பாளராக அறிவித்தால், வெற்றி வாய்ப்பு சாதகமாக இருக்கும் என்பதையும் அந்தந்த மாவட்ட செயலாளர்களிடம் தனித்தனியே கருணாநிதி கருத்துகளை கேட்டறிந்தாகவும் தெரிகிறது.

தங்களுடைய ஆதரவாளர்களுக்கு தேர்தலில் இடம் கிடைக்கவில்லை என்றாலும், மனம் தளராமல் தொய்வின்றி தேர்தல் பணிகளை மாவட்ட செயலாளர்கள் ஆக்கப்பூர்வமாக ஆற்றிட வேண்டுமென்றும் கருணாநிதி வலியுறுத்தியதாகவும் தெரிகிறது.

பாராளுமன்ற தேர்தல் நிதி வசூல் செய்ததற்காகவும், தேர்தல் பணிகளை உற்சாகத்துடனும், உத்வேகத்துடன் ஆற்றிட வேண்டும் என்பதற்காகவும், மாவட்ட செயலாளர்களை ஊக்குவிக்கும் விதமாக, தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்பட மாவட்ட செயலாளர்கள் அனைவருக்கும் தலா ஒரு பவுன் தங்க மோதிரத்தை கருணாநிதி அணிவித்து, நினைவு கேடயம் ஒன்றையும் வழங்கினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply