அமெரிக்க ராணுவத்திற்கான நவீன டயர்களை உருவாக்கும் ஒப்பந்தத்தைப் பெற்றுள்ள இந்திய-அமெரிக்க நிறுவனம்

அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவழியினரான ஆப்ரகாம் பன்னிகோட்டு அங்குள்ள ஓஹியோ மாகாணத்தில் அக்ரோன் என்ற பொறியியல் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றார். சாலையோர குண்டுகள் அல்லது துப்பாக்கி சூட்டினால் பாதிக்கப்பட்ட பின்னரும் நவீன வகையில் இயங்கக்கூடிய பூஜ்ஜிய அழுத்த டயர்களை அமெரிக்க ராணுவத்திற்காக உருவாக்கும் பணி ஒப்பந்தம் இந்த நிறுவனத்திற்குக் கிடைத்துள்ளது. ராணுவத்தின் பேஸ்௨ எனப்படும் இந்தத் திட்டத்திற்கான ஒரு மில்லியன் டாலர் மானியத்தொகை அந்நாட்டு பாதுகாப்புத்துறையால் நேற்று இந்த நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியிடப்பட்டன.

இது குறித்து அரசின் அறிக்கையில் “தற்போதுள்ள ராணுவ வாகனங்களின் டயர்கள் சேதமடைந்தாலும் அவை தொடர்ந்து இயங்கும் திறன் கொண்டிருக்கும்போதிலும் அவற்றின் தொழில்நுட்பத்தை மேம்படுத்த அரசு விரும்புகிறது. பூஜ்ஜிய அழுத்த டயர்களின் மூலம் கனமான சுமைகளை ஏற்றிச்செல்லவும், வீரர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படும்போது அவர்களை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்கும் எளிதாக இருக்கும். ஏற்கனவே இவை பயன்பாட்டில் இருந்தாலும் சமதளமில்லாத சாலைகளும், வெப்பநிலை உயர்வும் இந்த டயர்களின் பெரிய குறைபாடுகளாக இருக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இந்தக் குறைகளைக களைந்து ராணுவத்தினருக்கான அதிக எடைகளை சுமந்து செல்வதிற்கும், எளிதான சவாரிக்கும் உதவும் வகையில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் பூஜ்ஜிய அழுத்த டயர்களை உருவாக்கும் பணியே தற்போது இந்த நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய தொழில்நுட்ப உருவாக்கம் ராணுவத்தினருக்கு மட்டுமின்றி வாகன உற்பத்தி தொழில்துறையிலும் பெரிய முன்னேற்றத்தைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ராணுவ வீரர்களின் உயிர்களைக் காப்பதற்கு கிடைக்கும் இந்த வாய்ப்பே நிறுவனத்தின் குறிக்கோளாகவும், உந்துசக்தியாகவும் இருந்து செயல்படும் தன்மையை அளிக்கும்” என்று இந்த ஒப்பந்தம் குறித்து நிறுவன உரிமையாளரான ஆப்ரகாம் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply