உக்ரைன் ராணுவ தளத்தை தகர்த்து கிரீமியாவில் நுழைந்தது ரஷியப் படை
உக்ரைனின் தன்னாட்சிப் பிராந்தியமான கிரீமியாவின் செவஸ்டோபோல் துறைமுக நகரில் ராணுவ தளத்தின் கேட்டை உடைத்துக்கொண்டு ரஷியப் படை முன்னேறிச் சென்றது. இதனால் உக்ரைனில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இது குறித்து “இன்டர் ஃபேக்ஸ்’ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: கிரீமியாவின் செவஸ்டோபோல் துறைமுத்தில் வெள்ளிக்கிழமை 100-க்கும் மேற்பட்ட உக்ரைன் ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். அப்போது ராணுவ டிரக்கில் வந்த 20-க்கும் மேற்பட்ட ரஷிய ஆதரவாளர்கள் கையெறி குண்டை வீசியபடி உக்ரைன் ராணுவக் குடியிருப்பு முன்பிருந்த தடுப்பு வேலிகளை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தனர். அவர்களிடம் ராணுவ அதிகாரி பேச்சுவார்த்தைக்கு முற்பட்டார் என்று ராணுவ அமைச்சக அதிகாரி கூறியதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே ரஷிய தலைநகர் மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு அந்நாட்டின் தேசியக் கொடிகளை அசைத்தவாறு “ரஷியாவுக்கே கிரீமியா!’ என்று கோஷமிட்டனர்.
கிரீமியா நாடாளுமன்றத்தில், ரஷியாவுடன் இணைவதற்கான தீர்மானம் கடந்த வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது. இது குறித்து கிரீமியா பிராந்திய மக்களிடம் வரும் 16ஆம் தேதி வாக்கெடுப்பு நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், இந்த அணுகுமுறை சர்வதேச விதிமுறைகளுக்கு முரணானது என்று அமெரிக்க அதிபர் ஒபாமா எதிர்ப்பு தெரிவித்தார்.
கிரீமியாவின் இந்த நடவடிக்கை கவலையளிக்கக் கூடியது என்றும், பொதுவாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முன் அதில் அக்கறை கொண்டுள்ள கட்சிகள் அதனை தடுத்து நிறுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் ஐ.நா.வின் செய்தித்தொடர்பாளர் மார்ட்டின் நெசர்கி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை: இந்த நிலையில், ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், “”ரஷியா மீது பொருளாதாரத் தடை விதிக்கும் நடவடிக்கைகள் கிரீமியா மீது எதிரொலிக்கும்.இந்த விவகாரத்தில் அவசரப்பட்டு எடுக்கும் நடவடிக்கைகள் ரஷிய-அமெரிக்க உறவுகளைப் பாதிக்கும். குறிப்பாக பொருளாதார விஷயங்கள் அமெரிக்காவைத் திரும்ப தாக்கும் என்பது தவிர்க்க முடியாதது” என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதேவேளையில், உக்ரைனின் அனைத்து பிரச்னைகளையும் முடிவுக்கு கொண்டுவர எங்களது நட்பு நாடுகள் தெரிவிக்கும் வழியில் உதவுவதற்கு நேர்மையான பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் தொலைக்காட்சி ஒன்றுக்கு லாவ்ரோவ் சனிக்கிழமை பேட்டியளித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளுக்கு ஒபாமா வரவேற்பு: உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுவது என்று கடந்த 6ஆம் தேதி ஐரோப்பிய கவுன்சில் எடுத்த முடிவை அமெரிக்க அதிபர் ஒபாமா வரவேற்றுள்ளார்.
ரஷியாவுக்கு வெனிசூலா ஆதரவு: இதனிடையே, வெனிசூலாவில் அதிபர் நிகோலஸ் மதுரோவுக்கு எதிராக எதிர்ப்பாளர்கள் போராட்டம் நடத்தி வரும் வேளையில், உக்ரைன் முன்னாள் அதிபர் விக்டர் யானுகோவிச்சுக்கு அவர் ஆதரவு தெரிவித்துள்ளார். அமெரிக்க ஆதரவுடன் உக்ரைனில் ஆட்சி கவிழ்ப்பு நிகழ்ந்துள்ளதாக மதுரோ குற்றம்சாட்டியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply