39 தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டி: ஜி.கே.வாசன் அறிவிப்பு
மத்திய மந்திரி ஜி.கே.வாசன் இன்று சென்னையில் தன் வீட்டில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் ஆலோசனை நடத்தினார். பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:– பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி தனித்து விடப்படவில்லை. எங்களை விட்டு பிரிந்து தனியாக சென்றவர்கள்தான் தனித்து விடப்பட்டுள்ளனர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை காங்கிரஸ் கட்சி மிகவும் வலிமையாக உள்ளது. கிராமங்களில் காங்கிரசுக்கு நல்ல அடித்தளம் உள்ளது. தமிழ்நாட்டில் 15 முதல்20 சதவீத நிரந்தர வாக்கு வங்கி காங்கிரசுக்கு இருப்பதை கடந்த காலங்களில் நடந்த தேர்தல்கள் நிரூபித்துள்ளன. வரும் பாராளு மன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது.
நகரம் முதல் கிராமம் வரை காங்கிரஸ் கட்சியின் சின்னமான கை சின்னம் நிச்சயம் பிரதிபலிக்கும். 39 தொகுதிகளுக்கும் நான் சுற்றுப் பயணம் செய்து காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்காக உறுதியாக பாடுபடுவேன். உண்மையான மதச்சார்பின்மை அரசை மத்தியில் காங்கிரஸ் கட்சியால் மட்டுமே கொடுக்க முடியும். இது நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும்.
தமிழ்நாட்டில் இந்த தடவை 39 தொகுதிகளிலும் போட்டியிட காங்கிரஸ் கட்சிக்கு நல்ல சந்தர்ப்பம் அமைந்துள்ளது. எனவே இந்த தடவை காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் ஓட்டுக்கள் கிடைக்கும். கூட்டணி பேச்சு வார்த்தைகளை பொருத்தவரை காங்கிரஸ் கட்சி மற்ற கட்சிகளிடம் நேர்மையாக நடந்துள்ளது. ஆனால் கூட்டணி கட்சிகள் அப்படி நடந்து கொள்ளவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் நிரந்தரமான வாக்கு வங்கி உள்ளது. தேர்தலுக்கு பிறகு இது தெரியவரும்.
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க முன் வராத கட்சிகள் நிச்சயம் தேர்தலுக்குப் பிறகு வருத்தம் அடையும். பாராளுமன்ற தேர்தலில் நான் இந்த தடவை போட்டியிட போவதில்லை. 39 தொகுதியிலும் காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு, மற்றும் பிரசார வியூகம் உள்பட ஏராளமான பணிகள் செய்யப்பட வேண்டியதுள்ளது. எனவே 39 தொகுதிகளுக்கும் செல்ல வேண்டியதுள்ளது. இதற்கான பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டிருக்கிறேன். விரைவில் காங்கிரஸ் செயல்பாடுகள் தொடங்கும்.
39 தொகுதிகளிலும் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை தமிழக தலைவர் உரிய நேரத்தில் அறிவிப்பார். தமிழ் நாட்டில் நீண்ட இடைவெளிக்கு பிறகு காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுக்கிறது. இதை காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
மத்திய அரசின் திட்டங்களை மக்கள் மத்தியில் எடுத்து சொல்ல வேண்டும். காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும். காங்கிரஸ் தமிழ்நாட்டில் தனித்து போட்டியிடுவது புதிதல்ல. ஏற்கனவே 1977, 1984, 1989 ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டுள்ளது.
1999 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைமையில் தேர்தலை சந்தித்தது. அப்போது காங்கிரஸ் கட்சிக்கு 10 சதவீத வாக்குகள் கிடைத்தன. இந்த வாக்கு வங்கி தொடர்ந்து நிரந்தரமாக அதிகரித்து தான் வந்துள்ளது. குறைவதற்கான வாய்ப்பே இல்லை. காங்கிரசுக்கு தமிழ்நாட்டில் வாக்கு வங்கி குறைந்துவிட்டதாக யாராலும் எடை போடமுடியாது. நிச்சயம் காங்கிரஸ் தேர்தலில் வெற்றி பெறும்.
இவ்வாறு மத்திய மந்திரி ஜி.கே.வாசன் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply