நேச நாடுகளின் முழு ஆதரவும் எமக்கு கிடைப்பது உறுதி ஜனீவா பிரேரணை குறித்து : ஜனாதிபதி

நட்பு நாடுகளின் ஆதரவு எம்மோடு உள்ளவரை நாட்டைக் கட்டியெழுப்பும் எமது முன்னேற்ற நடவடிக்கைகளை எவராலும் சீர்குலைக்க முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். எமது முன்னேற்றத்தை பொறாமையுடனும் குரோதத்துடனும் நோக்குபவர்களே எமக்கெதிரான சூழ்ச்சிகளிலும் விமர்சனங்களிலும் ஈடுபட்டுள்ளனர் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, ஜெனீவா மனித உரிமை பேரவை உட்பட அனைத்து விவகாரங்களிலும் எமது நேச நாடுகளின் முழுமையான ஆதரவு எமக்குக் கிடைப்பது உறுதி எனவும் தெரிவித்தார்.

எதிர்வரும் 28 ஆம் திகதி ஜெனீவா மனித உரிமை பேரவையில் சீனா இலங்கைக்கு நேரடியாக ஆதரவு வழங்கும் என உறுதியளித்துள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அதற்காக சீன அரசாங்கத்துக்கு நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.

மாத்தறை மாவட்டத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்ததுடன் முலடியன, கம்புறுபிட்டிய உட்பட நான்கு புனரமைக்கப்பட்ட வீதிகளை திறந்து வைத்தார்.

அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா, பிரதி அமைச்சர் ஹேமால் குணசேகர உட்பட அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி :-

நான் அடிக்கல் நாட்டும் வைபவங்களில் கலந்துகொள்வதில்லை என்பதால் மேற்படி வீதிகளுக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ அவர்கள் அடிக்கல் நாட்டினார். ஏனெனில் சில பிரதேசங்களில் நாட்டப்பட்ட அடிக்கல்கள் முளைக்கத் தொடங்கிவிட்ட போதும் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிராமையின் காரணத்தினாலேயே நான் அடிக்கல் நாட்டச் செல்வதில்லை.

இரண்டு நாட்களுக்கு முன்பதாக சீன நிதியுதவியுடன் நாம் காலி – மாத்தறைக்கான அதிவேக நெடுஞ்சாலையை நிர்மாணித்து மக்கள் உபயோகத்துக்காகத் திறந்து வைத்தோம். இந்த வீதியூடாக இனி ஒரு மணித்தியாலம் சில நிமிடங்களில் மக்களுக்குக் கொழும்புக்குப் பிரயாணிக்க முடியும்.

இங்கு கொட்டபொல சந்தியிலிருந்து மாத்தறை செல்வதற்கு ஆறு மணித்தியாலயங்கள் கழிந்தன. இன்று திறக்கப்படும் பாதைகள் இந்த பயண நேரத்தை இரண்டு மணித்தியாலங்களாக குறைக்கச் செய்கின்றன. காலம் எம் அனைவருக்குமே முக்கியமானது.

இத்தகைய வீதிகளை நாம் நிர்மாணித்து மக்களின் பிரயாணங்களை இலகுபடுத்தும் போது சிலர் இத்தகைய வீதிகளை ஏன் அமைக்கின்றனர். இவற்றில் பிரயோசனமில்லை என்று விமர்சிக்கின்றனர். இவற்றுக்கு ஏன் வீண் செலவு என்றும் போக்குகளையும் பாலங்களையும் வீதிகளையும் அமைப்பதன் மூலம் நாட்டை அபிவிருத்தியில் கட்டியெழுப்ப முடியுமா என்று கேள்வியெழுப்புகின்றனர்.

பாலங்கள், பாதைகள், போக்குகளை அமைக்கும் போதுதான் நாடு அபிவிருத்தியடைகிறது. மக்கள் முன்னேற்றத்துக்கு அவை வழிவகுக்கின்றன என்பதை அறியாதோரே விமர்சனங்களில் ஈடுபடுகின்றனர்.

இது பொறாமை, எரிச்சல் குரோதத்துடன் பார்க்கும் யுகம், அனைத்தையும் குறையுடனும் இழிவுபடுத்தும் வகையிலுமே சிலர் பார்க்கின்றனர். அவர்களுக்கு செய்வதற்கு வேறு வேலையில்லை என்பதால் அவ்வாறு செய்கின்றனர். எமக்கு செய்வதற்கு அநேக வேலைகளுள்ளன. அவற்றின் மூலம் நாட்டு மக்களின் தேவைகளைப் பெற்றுக் கொடுக்கும் பொறுப்பு எமக்கு உள்ளது.

நம் நாட்டில் பாரிய அபிவிருத்தியை மேற்கொண்டுள்ளோம். 100 ற்கு 98 வீதமானோருக்கு நாட்டில் மின்சாரம், வழங்கப்பட்டுள்ளது. குடிநீர் வழங்கல் பெரும்பாலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வசதியுள்ளவர்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்த மின்சார வசதிகள் தற்போது நாட்டில் அனைத்து மக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. கொழும்புக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்த ‘காபர்ட்’ வீதிகள் இப்போது கிராமங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளன. கிராம மக்களும் நகர மக்கள் அனுபவித்த சகல வசதிகளையும் அனுபவித்து வருகின்றனர்.

ஒரு யுக மாற்றம் நாட்டில் ஏற்பட்டுள்ளது. நாம் அனைவரும் அதன் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியுள்ளது. மக்களுக்குத் தேவையான அத்தனை அபிவிருத்திகளும் நடைமுறைப்படுத்த ப்படுகின்ற யுகம் என இந்த யுகத்தைக் குறிப்பிட முடியும்.

இத்தகைய சகல செயற்றிட்டங்களும் நாட்டின் நாளைய சுபீட்சத்தை நோக்காகக் கொண்டே மேற்கொள்ளப்படுகின்றன. இது உங்கள் பிள்ளைகளுக்கான முதலீடு. கல்வித் துறை முன்னேற்றம் பாடசாலைகளில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்துமே எதிர்கால சந்ததிகளின் சுபீட்சத்தை இலக்காகக் கொண்டு நடைமுறைப்படுத்தப் படுகின்றன. ஏனெனில் இந்த நாட்டின் எதிர்காலம் அவர்கள் கைகளிலேயே தங்கியுள்ளது.

இந்த அபிவிருத்தியின் பயணத்தைத் தடை செய்ய சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு செயற்படுகின்றனர். அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.

சீனத் தூதுவர் இங்கு உரையாற்றும் போது கூறினார், எதிர்வரும் 28 ஆம் திகதி ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் சீனா நேரடியாகவே இலங்கைக்கு ஆதரவு வழங்கும் என்று. அதற்காக நான் அவருக்கு நன்றி கூற விரும்புகின்றேன்.

எமது நட்பு நாடுகளின் ஆதரவு எமக்கு உள்ளவரை எம்மை எவரும் எதுவும் செய்ய முடியாது. நாட்டைக் கட்டியெழுப்பும் எமது செயற்பாடுகளுக்கு எமது நேச நாடுகள் தொடர்ந்தும் ஆதரவளிப்பது உறுதி எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply