இலங்கையை விமர்சித்த பலநாடுகள் குற்றச்சாட்டுகளை மாற்றி பின்வாங்கியுள்ளன
இலங்கை குறித்து விமர்சித்த பல நாடுகள் தமது குற்றச்சாட்டுகளை மாற்றி பின்வாங்கியுள்ளன. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த பிரச்சினையில் அரசியல் இலாபம் கருதாது தேசிய ரீதியில் சிந்தித்து செயற்பட வேண்டும் என ஆளும் தரப்பு பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ், தீர்மானத்திற்கு அனுமதி வழங்குவது தொடர்பான விவாதத்தில் நேற்று உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, தனியார் துறை ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் பூர்வாங்கத் திட்டமொன்றை அரசாங்கம் முன்வைத்த போது கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் மோதல் ஏற்பட்டு அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. இவ்வாறான பிரச்சினைகளின் போது பொலிஸினூடாக செயற்படாது மனித உரிமை ஆணைக்குழுவினூடாக எவரையும் விசாரணை செய்து பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்.
பொது மக்களுக்கு தமக்குள்ள உரிமைகள் குறித்து அறிவூட்ட வேண்டும் ஆனால், சில அமைப்புகளே உரிமைகள் குறித்து பேசுகின்றன. அவை ஒரு தலைபட்சமாகவே செயற்படுகின்றன. பிரதான உரிமைகள் குறித்து பொது மக்களும் சிவில் அமைப்புகளும் அறிவூட்டப்பட வேண்டும். மனித உரிமை ஆணைக்குழுவுக்கு பல்வேறுபட்ட முறைப்பாடுகள் கிடைக்கின்றன. எனவே இதற்கு ஏற்றவாறு மனித உரிமை ஆணைக்குழுவுக்கு கூடுதல் வசதிகள் அளிக்கப்பட வேண்டும். வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் ஜனநாயகத்தை உறுதி செய்யவும் ஜனநாயக நிர்வாகத்தை ஏற்படுத்தவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை பலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மனித உரிமை குறித்து பேசும் போது அதனுடன் தொடர்புடைய சகல பிரிவுகள் தொடர்பாகவும் கவனிக்க வேண்டும். எமது நாடு அடைந்துள்ள முன்னேற்றத்தையும் ஜனநாயக வெற்றியையும் நிறுத்துவதற்கு சில குழுக்கள் முயற்சி செய்கின்றன. எமது நாட்டை விமர்சிக்கின்றன.
ஆனால் இலங்கைக்கு எதிராக குரல் கொடுத்த நாடுகள் பின்வாங்கத் தொடங்கியுள்ளன. குற்றச்சாட்டுக்கள் குறித்த பதில் தொடர்பில் அவை கவனிக்க தலைப்பட்டுள்ளன.
இந்த தேசிய பிரச்சினையின் போது தேசிய முக்கியத்துவம் குறித்து பாராளுமன்றம் செயற்பட வேண்டும். அரசியல் கட்சி ரீதியில் செயற்படாது. நாடு எட்டியுள்ள வெற்றி குறித்து சிந்தித்து தேசிய ரீதியில் செயற்பட வேண்டும்.
எமக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சம்பிரதாயபூர்வமானவை. இதற்கு முன்னர் முன்வைக்கப்பட்ட அதேபோன்ற குற்றச்சாட்டுகளே இம்முறையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. புலிகள் எமது நாட்டை துண்டாட முயற்சித்த போதும் ரஜீவ் காந்தியை கொன்ற போதும் உண்மை நிலையை பார்க்கத் தவறிய டயஸ்போராக்கள் திரும்பவும் அதேபோன்றே செயற்படுகின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply