பௌத்த இனவாதிகளுக்கு முஸ்லிம் சமூகம் அடங்கிப்போகாது : அமைச்சர் ரிஷாத்
முஸ்லிம் சமூகத்தின் செயற்பாடுகளை பொது பலசேனாவினால் ஒருபோதும் தடுக்க முடியாது. பௌத்த இனவாதிகளுக்கு முஸ்லிம் சமூகம் அடங்கிப்போகாது என அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். மேலும், முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்தக்கூடாது என்பதே எமது கோட்பாடு. அவ்வாறானதொரு நிலைமையினை எப்போதும் ஏற்படுத்திவிடமாட்டோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தனது உத்தியோகபூர்வ இணையத்தள வெளியீட்டின்போது இக் கருத்தினை அவர் முன்வைத்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
இலங்கையில் முஸ்லிம் சமூகத்தினை ஒடுக்கி, கட்டுப்படுத்தும் செயற்பாட்டினை பௌத்த அமைப்புகள் பல முன்னெடுத்து வருகின்றன. குறிப்பாக பொதுபலசேனா பௌத்த அமைப்பினர் அரசாங்கத்தின் ஒரு சில தூண்டுதல் சக்திகளின் துணையுடன் முஸ்லிம் சமூகத்தினரை ஒடுக்கும் செயற்றிட்டத்தினை கையில் எடுத்துள்ளனர்.
ஹலால் மற்றும் முஸ்லிம் சமூகத்தினரின் நிக்காப், புர்கா போன்ற உடைகளை தடுப்பது போன்ற செயல்களை செய்து முஸ்லிம்களை விரட்டியடிக்கும் செயலைச் செய்து வருகின்றனர்.
நாட்டில் பள்ளிவாசல்களை உடைப்பதனால் முஸ்லிம்கள் தொழுகைகளை விடப்போவதில்லை. ஐந்துவேளை தொழுகையினை அனைத்து முஸ்லிம்களும் கட்டாயம் செய்வார்கள்.
முஸ்லிம் சமூகத்தின் கலாசார செயற்பாடுகளையோ அல்லது எமது மத விடயங்களையோ எந்த சேனா அமைப்பினாலும் தடுக்க முடியாது.
பௌத்த மதத்தினர் தமது உரிமைகளை சுதந்திரமாக அனுபவிக்கும்போது முஸ்லிம்களும் தமது மத உரிமைகளை சுதந்திரமாக அனுபவிக்க முடியும்.
அனைத்து மதத்தவரும் தத்தமது மத உரிமைகளை சுதந்திரமாக அனுபவிக்கக்கூடிய உரிமை இலங்கையின் சட்டத்திலேயே உள்ளது. இதனை எவரும் தடுக்க முடியாது.
பௌத்த பேரினவாதிகளின் கோட்பாடுகளுக்கோ அல்லது அடக்குமுறைகளுக்கோ அடங்கிப்போகும் நிலையினை எப்போதும் முஸ்லிம் சமூகத்தினர் உருவாக்கமாட்டார்கள்.
மேலும், விடுதலைப்புலி தீவிரவாதிகளின் அடக்குமுறைகளில் சிக்கி வடக்கில் இருந்து பல்லாயிரக் கணக்கான முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்டார்கள். அன்று விடுதலைப் புலிகள் நாட்டிற்கு எதிராக ஆயுதம் ஏந்தியதைப்போல் முஸ்லிம்களும் ஆயுதம் ஏந்திவிடக்கூடாது என்பதற்காகவே அஷ்ரப் அவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை உருவாக்கினார்.
அன்று முஸ்லிம்களை பாதுகாக்க அவர் முஸ்லிம் காங்கிரஸை அமைத்தாலும் அவரின் மறைவின் பின்னர் கட்சி சுயநலமாக செயற்பட ஆரம்பித்துவிட்டது.
நாம் கட்சியை விட்டு வெளியேறவும் இதுவே காரணமாக அமைந்தது. இன்றும் முஸ்லிம் சமூகத்தினர் எக்காரணங்களுக்காகவும் ஆயுதம் ஏந்திவிடக்கூடாது என்பதற்காகவே நாம் தொடர்ந்தும் முயற்சித்துக் கொண்டிருக்கின்றோம்.
அரசாங்கத்தில் இருந்து எமது சமூகத்திற்குள் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதோடு மூவின சமூகத்தினையும் ஒன்றிணைத்து நல்லாட்சியினை ஏற்படுத்தும் நோக்கோடு நாம் தொடர்ந்தும் செயற்படுகின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply