ஜின்பிங் தனது முதல் ஐரோப்பிய பயணத்தைத் தொடங்கியுள்ளார்

உக்ரைனிலிருந்து பிரிந்த கிரிமியாவை உலக நாடுகளின் கண்டனங்களையும் மீறி ரஷ்யா இணைத்துக் கொண்டிருப்பது பதற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இந்த வேளையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது முதல் ஐரோப்பிய பயணத்தைத் தொடங்கியுள்ளார். இவருடன் இவரது மனைவி, வர்த்தக அமைச்சர் உட்பட பல அமைச்சர்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட வணிக பிரதிநிதிகள் ஆகியோர் இந்த சுற்றுப் பயணத்தில் பங்கு கொள்கின்றனர்.

வரும் 24 மற்றும் 25 தேதிகளில் தி ஹேகில் 58 உலக நாடுகள் கலந்துகொள்ளும் அணுசக்தி பாதுகாப்பு மாநாடு ஒன்று நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ளும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, கிரிமியா தொடர்பான ரஷ்ய நடவடிக்கை குறித்து விவாதிப்பார் என்று கூறப்படுகின்றது. இதனைத் தொடர்ந்த ஜி7 நாடுகளின் கூட்டம் ஒன்றும் அங்கு நடைபெற உள்ளது. இந்த அமைப்பின் உறுப்பினர் நாடுகள், ரஷ்யா கிரிமியாவை ஆக்கிரமித்ததைக் கடுமையாகக் கண்டித்து இதற்கான பொருளாதாரத் தடைகளையும் ரஷ்யா மீது விதித்துள்ளன.

அணுசக்தி பயங்கரவாதத்தினை எதிர்த்து நடைபெறும் பாதுகாப்பு மாநாட்டிற்கு இடையில் சீன அதிபர் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை சந்திப்பார் என்று கூறப்படுகின்றது. உக்ரைன் நெருக்கடி குறித்த பேச்சுவார்த்தையும் இவர்களின் சந்திப்பில் நிகழக்கூடும் என்று சீனாவின் துணை வெளியுறவு அமைச்சர் லி பவோடோங் தெரிவித்தார்.

எனினும் இதுநாள் வரை இந்தப் பிரச்சினை குறித்து கருத்து எதுவும் தெரிவிக்காத சீனா, தனது கட்டுப்பாடு மற்றும் அமைதி நிலையைத் தொடரக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஆனால் அதிகரித்து வரும் உக்ரைன் நெருக்கடி இந்த மாநாடு நடைபெறுவதற்கான இடர்களையும் அதிகரித்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும் ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி முடிவடையும் இந்த நான்கு நாடுகளுக்கான சுற்றுப்பயண திட்டத்தில் சீன அதிபர், பிரான்ஸ் அதிபர் பிரான்க்காய்ஸ் ஹாலண்டேவையும் , ஜெர்மனியின் ஏஞ்சலா மார்க்கலையும் சந்திக்க உள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply