முஷரப் மீது தேச துரோக வழக்கில் குற்றச்சாட்டு பதிவு

பாகிஸ்தானில் கடந்த 2007-ம் ஆண்டில் அரசியல் சட்டத்தை முடக்கி வைத்து நெருக்கடிநிலை பிரகடனப்படுத்தியதாக குற்றம்சாட்டி முன்னாள் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷரப்(70) மீது தேசதுரோக வழக்கு தொடரப்பட்டது. இதை இஸ்லாமாபாத்தில் உள்ள தனிக்கோர்ட்டில் நீதிபதி பைசால் அராப் தலைமையில் 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்கிறது. இதில் நேரில் ஆஜராவதை முஷரப் பலமுறை தவிர்த்தார். எனவே தனிக்கோர்ட்டு அவரை 31-ந்தேதி (நேற்று) ஆஜராக வேண்டும் எனவும், தவறினால் நிபந்தனையுடன் கூடிய கைது வாரண்டு நிறைவேற்றவும் உத்தரவிட்டது. அதன்படி தனிக்கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு நேற்று வந்த போது முஷரப் ஆஜரானார்.

பிறகு நீதிபதி பைசல் அராப் வாசிக்க, முஷரப் மீது தேசதுரோகம் செய்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் முஷரப்புக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.

இந்த குற்றச்சாட்டுகளை முஷரப் மறுத்தார். அவர் கூறுகையில், ‘நான் எதை செய்திருந்தாலும் அவை இந்த நாட்டிற்காகவும், நாட்டு மக்களுக்காகவுமே செய்தேன். என்னை சர்வாதிகாரி என்று கூறுவதை கேட்டு மிகவும் வருத்தப்படுகிறேன்’ என்றார். மேலும் தொடர்ந்து கூறுகையில், ‘பாகிஸ்தான் ராணுவத்திற்கும், நாட்டின் முன்னேற்றத்துக்கும் 44 ஆண்டுகள் கடுமையாக உழைத்திருக்கிறேன்’ என்றும் முஷரப் தனது விளக்கத்தை பதிவு செய்தார்.

உடனே அரசு வக்கீல் அக்ரம் சயீக் குறுக்கிட்டு, ‘சர்வாதிகாரி என்ற வார்த்தையை நான் எங்கும் குறிப்பிடவில்லை’ என பதில் கொடுத்தார்.

கோர்ட்டில் முஷரப் சார்பில் நேற்று பராக் நசீம் என்ற புதிய வக்கீல் ஆஜரானார். முஷரப் தனது தாயாரை பார்க்க வெளிநாடு செய்ய அனுமதிக்க வேண்டும். அதேபோல முஷரப் சிகிச்சை பெற அமெரிக்காவே சிறந்த இடம். அங்கு செல்ல அவருக்கு அனுமதி கொடுக்க வேண்டும்’ என அவர் வாதாடினார். இதன் மீதான விசாரணை பின்னர் எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் கூறி விவாதத்தை முடித்து வைத்தனர். பாகிஸ்தான் வரலாற்றில் முன்னாள் ராணுவ மூத்த தளபதி மீது தேசதுரோக வழக்கு தொடரப்பட்டு இருப்பது இதுவே முதல் தடவையாகும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply