உக்ரைன் பிரச்னைக்கு தீர்வு அமெரிக்கா – ரஷியா பேச்சுவார்த்தை தோல்வி
உக்ரைன் பிரச்னைக்கு தீர்வு காணும் பொருட்டு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி மற்றும் ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோர் நடத்திய 4 மணி நேரப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஞாயிற்றுக்கிழமை இருவரும் நடத்திய பேச்சுவார்த்தையின்போது, உக்ரைனில் பதற்றத்தை தணிக்கும் வகையில் அதன் எல்லையில் குவிக்கப்பட்டுள்ள ரஷியப் படைகளை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று லாவ்ரோவிடம் ஜான் கெர்ரி வேண்டுகோள் விடுத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் ஜான் கெர்ரி கூறுகையில், ரஷியப் படை உக்ரைனில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இத்தகைய சூழ்நிலையை தவிர்க்க சர்வதேச சமுதாயத்துடன் இணைந்து உக்ரைன் ராஜீயரீதியான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது அவசியம் என்பதை தெரிவித்துள்ளோம் என்றார்.
இந்தச் சந்திப்பின்போது ரஷியப் படைகளை விலக்கிக்கொள்வதற்கான பல்வேறு யோசனைகளை ஜான் கெர்ரி முன்வைத்தபோதும், அவற்றில் எத்தகைய அணுகுமுறையை ரஷியா மேற்கொள்ளும் என்பது குறித்து எத்தகைய உறுதிமொழியையும் லாவ்ரோவ் அளிக்கவில்லை. இதனால் உக்ரைன் பிரச்னைக்கு தீர்வு காண்பதில் முட்டுக்கட்டை நீடிக்கிறது.
உக்ரைனின் கிரீமியா தன்னாட்சிப் பிராந்தியத்தை தன்னுடன் இணைத்துக் கொண்ட பிறகும் பெருமளவிலான படைகளை அந்நாட்டின் கிழக்கு மற்றும் தெற்கு எல்லைப் பகுதியில் ரஷியா குவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply