மோடி பிரதமரானால் விசா தடை தானாகவே விலகும்: அமெரிக்கா
குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடி, இந்தியாவின் பிரதமரானால் அவருக்கு விசா வழங்க விதிக்கப்பட்டுள்ள தடை தானாகவே நீங்கிவிடும் என்று அமெரிக்க நாடாளுமன்ற ஆய்வுக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத்தில் மூண்ட கலவரத்தை ஒடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி, நரேந்திர மோடிக்கு விசா வழங்க அமெரிக்க அரசு தடை விதித்தது. கடந்த 9 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்தத் தடையால் அமெரிக்காவுக்கு நரேந்திர மோடியால் செல்ல முடியாத நிலை நிலவுகிறது.
இந்நிலையில், விரைவில் நடைபெறவுள்ள இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று நரேந்திர மோடி பிரதமரானால் அவருக்கு விசா வழங்கப்படுமா? என்பது குறித்து அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோ பிட்ஸ் (குடியரசு கட்சி) மற்றும் கேத் எல்லிசன் (ஜனநாயகக் கட்சி) ஆகியோர் அந்நாட்டு அரசிடம் 5 கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் கடந்த மாதம் 18ஆம் தேதி அமெரிக்க நாடாளுமன்ற ஆய்வுக்குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. “விசா கொள்கை; நரேந்திர மோடி மீதான வழக்கு’ என்ற தலைப்பில் 7 பக்கங்களை கொண்ட அந்த அறிக்கை, பொது மக்களின் பார்வைக்கு திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
அந்த அறிக்கையில், “இந்தியாவின் பிரதமர் பதவிக்கு பாஜக சார்பில் நரேந்திர மோடி போட்டியிடுகிறார். ஒருவேளை நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக தேர்வு செய்யப்பட்டால், அவர் தூதரகக் காப்புரிமை சலுகையைப் பெறுவார். அப்போது அவருக்கு விசா வழங்க அமெரிக்க அரசு விதித்துள்ள தடை தானாக நீங்கிவிடும்.
ஒரு நாட்டின் தலைவர் என்ற முறையில், ஏ௧ விசா பெறும் உரிமையை நரேந்திர மோடி பெற்று விடுவார்’ என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தனது அறிக்கையில், குஜராத் கலவரத்தில் நரேந்திர மோடிக்கு தொடர்பில்லை என்று இந்தியாவில் உள்ள நீதிமன்றங்களும், விசாரணை அமைப்புகளும் தெரிவித்திருப்பதையும் அமெரிக்க நாடாளுமன்ற ஆய்வுக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply