வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் சிலர் இலங்கையில் மீண்டும் பயங்கரவாதத்தைக் கொண்டு வரும் முயற்சி : அமைச்சர் ஜி.எல். 

இலங்கையில் விடுதலைப்புலிகள் இயக்கம் மீண்டும் துளிர்விட்டால், அதனை முளையிலேயே கிள்ளி எறிவோம்’ என இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பெரீஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வியாழக்கிழமை கூறுகையில், இலங்கையில், நிலைமையை அரசு தற்போது முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது.

நாட்டின் எந்தப் பகுதியிலும், எந்த வகையிலான பயங்கரவாதத்தையும் மீண்டும் வளர்க்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் அனைத்தையும் முளையிலேயே கிள்ளி எறிய முடியும் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் சிலர் இலங்கையில் மீண்டும் பயங்கரவாதத்தைக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வருவதற்கான வலுவான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன.

வெளிநாடுகளில் இருந்துகொண்டு பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவோரின் சொத்துகளை முடக்க வகை செய்யும் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் 1373-ஆவது விதிமுறையின் கீழ் அவர்கள் சொத்துகளை முடக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

இலங்கையில் பயங்கரவாதச் செயல்களைத் தூண்ட முயன்றதாக 65 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்குப் பின் அவர்களில் 19 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.

பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாகக் கூறப்படும் வெளிநாடு வாழ் தமிழர்களின் வங்கிக் கணக்குகளை, ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் விதிமுறை மூலம் முடக்க இலங்கை அரசு மேற்கொள்ளும் முயற்சி, வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் உரிமைகளை நசுக்குவதாக அமையும் என மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.

அதற்குப் பதிலாக, பயங்கரவாதம் குறித்த தனது கவலையை சம்பந்தப்பட்ட நாடுகளிடம் நேரடியாக வெளிப்படுத்தி, அந்நாட்டின் ஒத்துழைப்பைப் பெறுவதே சரியான வழியாகும் என அந்த அமைப்புகள் கூறியுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply