தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் முஸ்லிம் அமைச்சர்களுடன் பேசி சுமுகத்தீர்வு காண்பதாக ஜனாதிபதி உறுதி

தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் தொடர்பாக முஸ்லிம் அமைச்சர்களுடன் பேசி சுமுக தீர்வு காண்பதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அனைத்து இனங்களுக்காகவும் குரல் கொடுப்பதாகக் கூறிவரும் ஐ.தே.க சிறுபான்மையினரின் பிரச்சினை தொடர்பில் பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்ப முற்படும்போது அதனைத் தடுக்கும் வகையில் செயற்படுவதாகவும் அவர் கூறினார். தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் தொடர்பாக ஆங்கில ஊடக மொன்றில் வெளியிடப்பட்டிருந்த செய்தி தொடர்பில் பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அமைச்சரின் உரைக்கு இடையூறாக எதிர்க்கட்சியின் பிரதம கொரடா ஜோன் அமரதுங்க கருத்துத் தெரிவித்தார்.

இதன்போது பதிலளித்த அமைச்சர், சிறுபான்மை கட்சிகள் தமது கருத்துக்களை முன்வைக்க முயலும்போது எதிர்க்கட்சி அதற்கு தடங்கலாக செயற்படுவதாகக் குற்றஞ்சாட்டிய அவர், எமது உரிமைகளுக்காக குரல்கொடுக்கையில் இவ்வாறு நடந்து கொள்வது உகந்ததல்ல என்றும் குறிப்பிட்டார். அமைச்சர் மேலும் கூறியதாவது,

தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்தில் தலையிட்டு சுமுகமான தீர்வு பெற்றுத்தருவதாக ஜனாதிபதி எம்மிடம் உறுதியளித்திருந்தார். இது தொடர்பில் முஸ்லிம் அமைச்சர்களைச் சந்தித்துப் பேசுவதாகவும் கூறியிருந்தார்.

சிறுபான்மையினருக்கு தாம் விரும்பிய மதத்தை வழிபட உரிமையுள்ளது. முஸ்லிம்கள் என்று கூறிக்கொள்ளும் சிலர் பள்ளிவாசலை அகற்ற இணக்கப்பாட்டுக்கு வந்திருப்பதை ஏற்க முடியாது. இந்த விவகாரம் முழு முஸ்லிம்களுடன் தொடர்பு பட்டதாகும். பள்ளிவாசல் விவகாரம் தொடர்பாக தம்புள்ளை விகாராதிபதியுடன் பேசி இணக்கப்பாடு காணப்பட்டதாக கூறப்பட்டாலும் இது தொடர்பில் முஸ்லிம் அமைச்சர்களுக்கு தெளிவுபடுத்தப்படவில்லை. இது தொடர்பில் ஊடகங்களில் தெரிவிக்கப்பட்ட விடயம் எந்தளவு உண்மை என வினவுகிறேன்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply