நைஜீரியாவில் கலகத்தில் ஈடுபட்ட 12 வீரர்களுக்கு மரண தண்டனை: ராணுவ கோர்ட்டு அதிரடி தீர்ப்பு
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ‘ஷரியத்’ என்னும் இஸ்லாமிய சட்டத்தின்கீழான ஆட்சியை நிறுவுவதற்கு ‘போகோ ஹரம்’ தீவிரவாதிகள் ஆயுதம் ஏந்தி போராடி வருகிறார்கள். அங்கு சிபோக் என்று ஒரு நகரம் உள்ளது. இந்த நகரத்தில் போகோ ஹரம் தீவிரவாதிகள் அதிகளவில் தாக்குதல்கள் நடத்தி வந்தனர். இங்குதான் கடந்த ஏப்ரல் மாதம் ஒரு பள்ளிக்கூடத்திற்குள் அவர்கள் புகுந்து 270 மாணவிகளை கடத்திச்சென்றனர். அந்த மாணவிகளை மீட்க முடியாமல் இருப்பது ராணுவத்திற்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் கடந்த மே மாதம் 13-ந் தேதி, அடிக்கடி தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு ஆளான சிபோக் நகர சாலையில் ரோந்து செல்லுமாறு ராணுவ வீரர்களுக்கு தலைமை உத்தரவிட்டது. ஆனால் இது தற்கொலை முயற்சி போன்றது என கூறி ராணுவ வீரர்கள் ஏற்க மறுத்தனர்.
ஆனால் பின்னர் ராணுவ தலைமையின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு, அந்த சாலையில் ரோந்து சென்றனர். அப்போது தீவிரவாதிகள் அவர்கள் மீது தாக்குதல் தொடுத்தனர். இதில் பல வீரர்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட வீரர்களின் உடல்கள் மறுநாள் மைதுரி நகருக்கு கொண்டு செல்லப்பட்டன.
அப்போது ராணுவ வீரர்கள் கலகத்தில் ஈடுபட்டனர். ராணுவ கமாண்டிங் அதிகாரி மேஜர் ஜெனரல் முகமது மீது கல்வீச்சு நடத்தினர். வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பின்னர் கமாண்டிங் அதிகாரியை சுட்டுக்கொல்ல முயற்சித்தனர். அவர் தஞ்சம் புகுந்திருந்த ராணுவ வாகனத்தை துப்பாக்கி குண்டுகள் துளைத்தன. ஆனால் அவர் காயமின்றி தப்பினார்.
இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக 18 வீரர்கள் மீது ராணுவ தீர்ப்பாயத்தில் கலகம், கொலை முயற்சி வழக்கு தொடுக்கப்பட்டது. 9 உறுப்பினர்களை கொண்ட ராணுவ தீர்ப்பாயம் விசாரித்தது. விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு வழங்கிய தீர்ப்பாயம், 12 வீரர்களுக்கு மரண தண்டனை விதித்தது. 5 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று கூறி ராணுவ தீர்ப்பாயம் விடுவித்து விட்டது. ஒருவருக்கு 28 நாட்கள் சிறைத்தண்டனை விதித்தது.
முன்னதாக மரண தண்டனை விதிக்கப்பட்ட வீரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல், குற்றம்சாட்டப்பட்டவர்களில் பலர் வயதான தங்களது பெற்றோரை பாதுகாக்க வேண்டிய கடமையில் இருப்பதாகவும், சிலர் 10 ஆண்டுகளுக்கு மேலாக ராணுவத்தில் பணியாற்றியதாகவும் கூறி, கருணை காட்டுமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் அதை தீர்ப்பாயம் நிராகரித்து விட்டது.
இந்த வழக்கு விசாரணையின்போது பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் தீர்ப்பின்போது மட்டும் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply