உள்ளாட்சி இடைத்தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு

கோவை, தூத்துக்குடி மாநகராட்சி மேயர்பதவி, கடலூர், விருத்தாசலம், அரக்கோணம், ராமநாத புரம் ஆகிய 4 நகராட்சி தலைவர் பதவிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடந்தது. 2 மேயர், 4 நகராட்சி தலைவர் பதவி தவிர 8 மாநகராட்சி கவுன்சிலர்கள், 23 நகராட்சி வார்டு உறுப்பினர்கள், 39 பேரூராட்சி உறுப்பினர்கள் உள்பட மொத்தம் 530 உள்ளாட்சி பதவிகள் காலியாக உள்ளன. இந்த பதவிகளைப் பிடிப்பதற்காக 1,486 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அனைத்து இடங்களிலும் அ.தி.மு.க. போட்டியிடுகிறது. தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் இந்த தேர்தலை புறக்கணித்துள்ளன. பா.ஜனதா, கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்கள், சுயேட்சை கள் மட்டுமே களத்தில் உள்ளனர்.வேட்பாளர்கள் போட்டியிடும் இடங்களில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளில் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. இதையொட்டி அந்த பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் மூலம் வாக்குகள் பதிவு செய்யப்பட்டன. மற்ற உள்ளாட்சி பதவிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடிகளில் வாக்குச்சீட்டு முறைப்படி ஓட்டுக்கள் போடப்பட்டன.

பதட்டமான வாக்குச்சாவடிகளில் நடத்த ஓட்டுப்பதிவு முழுவதும் வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டன. காலை முதலே பெரும்பாலான பகுதிகளில் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது.

ஆண்களும் பெண்களும் நீண்ட ‘கியூ’வில் நின்று ஓட்டு போட்டனர். நேரம் ஆக ஆக ஓட்டுப்போட வந்தவர்களின் எண்ணிக்கை அதிகமானது.

கோவை மாநகராட்சி மேயர் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக கணபதி ராஜ்குமார், பாரதீய ஜனதா வேட்பாளராக நந்தகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளராக பத்மனாபன் உள்பட 16 பேர் போட்டியிடுகிறார்கள்.

கோவை மாநகராட்சியின் மேயரை தேர்ந்தெடுப்பதற்காக 100 வார்டுகளிலும் 1,226 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 236 வாக்குச்சாவடிகள் பதட்டம் நிறைந்தவை என்று அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கும் முன்னரே அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். வாக்குப்பதிவு தொடங்கியதும் ஆர்வமாக தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்க போலீசார் வாகனங்களில் ரோந்து வந்து கொண்டிருக்கிறார்கள்.

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் அந்தோணி கிரேசி, பா.ஜனதா சார்பில் ஜெயலட்சுமி மற்றும் 5 சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இதுபோன்று 37 வது வார்டு கவுன்சிலர் பதவிக்கான தேர்தலும் இன்று நடந்தது. இதற்காக 250 வாக்குச்சாவடிகள் மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது.

இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். காலை 7.05 மணிக்கு பா.ஜனதா வேட்பாளர் ஜெயலட்சுமியும், 8.00 மணிக்கு அ.தி.மு.க. வேட்பாளர் அந்தோணி கிரேசியும் தூத்துக்குடி இன்னாசியார்புரத்தில் புனித தோமையார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வாக்களித்தனர்.

பதட்டம் நிறைந்த 114 வாக்குச்சாவடிகளில் கேமரா மூலம் வாக்குப்பதிவு கண் காணிக்கப்பட்டது. மேலும் அந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

கடலூர் நகரசபை தலைவராக இருந்த சி.கே. சுப்பிரமணியன் பதவியை ராஜினாமா செய்ததை யடுத்து அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க. சார்பில் குமரனும், பாரதீய ஜனதா சார்பில் துறைமுகம் செல்வமும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் மாதவனும், சுயேட்சை வேட்பாளர் எஸ்.எஸ்.ராமச்சந்திரனும் போட்டியிடுகிறார்கள்.

இதுபோல் விருத்தாசலம் நகரசபை தலைவராக இருந்த ஆர்.டி. அரங்கநாதன் மரணம் அடைந்ததையடுத்து அந்த பதவிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க. சார்பில் அருளழகனும், பாரதீய ஜனதா சார்பில் சரவணனும் போட்டியிடு கிறார்கள்.

கடலூர் மற்றும் விருத்தா சலம் நகரசபை தலைவர் பதவிக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற்றது. கடலூர் நகராட்சியில் 1 லட்சத்து 27 ஆயிரத்து 153 வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் வாக்களிக்க வசதியாக 126 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. விருத்தாசலத்தில் நகராட்சி தலைவர் தேர்தலில் 50 ஆயிரத்து 677 வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். அவர்கள் வாக்களிப்பதற்காக 55 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. ஆனால் ஓட்டுப்பதிவு தொடங்கும் முன்பே வாக்காளர்கள் வாக்களிக்க வாக்குச்சாவடியில் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். பின்னர் வாக்குப்பதிவு தொடங்கியதும் ஆர்வமுடன் வாக்களித்தனர்.

அரக்கோணம் நகரசபை தலைவர் பதவிக்கு 5 பேர் போட்டியிடுகின்றனர். அ.தி.மு.க சார்பில் கண்ணதாசன் சுயேட்சை வேட்பாளர்களாக ஈஸ்வரன், ஆனந்தன், சுரேகா, நரேஷ்குமார் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளது. இதில் 30 ஆயிரத்து 586 ஆண் வாக்காளர்களும் 31 ஆயிரத்து 432 பெண் வாக்காளர்களும் உள்ளனர். மொத்தம் 63 ஓட்டுச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 7 மணிக்கு ஓட்டு பதிவு தொடங்கியது. மந்தமாக தொடங்கிய ஓட்டு பதிவு 8 மணிக்கு பின்னர் சூடுபிடிக்க தொடங்கியது. பெண்கள் ஆர்வமுடன் சென்று ஓட்டு போட்டனர்.

அ.தி.மு.க. வேட்பாளர் கண்ணதாசன் கிருஷ்ணாம் பேட்டை ஆதிதிராவிடர் பள்ளி வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார். பதட்டமான 31 வாக்கு சாவடிகளில் கேமரா கண்காணிப்புடன் ஓட்டுபதிவு நடந்தது.

ராமநாதபுரம் நகர்மன்ற தலைவராக இருந்த சேகர் இறந்ததால் அந்த பதவிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. சார்பாக சேகரின் மனைவி சந்தானலட்சுமி களம் இறங்கி உள்ளார். இவருக்கு போட்டியாக பாரதீய ஜனதா சார்பிலும், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் துரைக்கண்ணன் களத்தில் உள்ளார்.

இங்கு 51ஆயிரத்து 181 வாக்குகள் உள்ள நிலையில், 59 வாக்குச்வாவடிகள் அமைக்கப்பட்டு இன்று விறுவிறுப்பாக வாக்குப் பதிவு நடைபெற்றது.

பாரதீய ஜனதா வேட்பாளர் துரைக்கண்ணன், ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள நகராட்சி பெண்கள் மேலநிலைப்பள்ளியில் வாக்குப்பதிவு செய்தார். ராமநாதபுரம் நகராட்சியின் 19–வது வார்டுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இங்கு அ.தி.மு.க. வேட்பாளர் சீனி சர்புதீன் மற்றும் சீனி கமருதீன், சிராஜூதீன், முகமதுசிராஜ் என 3 சுயேட்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். மாவட்டத்தில் இடைத் தேர்தல் நடக்கும் பகுதிகளில் 25 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்ததாக கண்டறியப்பட்டு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதுபோல் உள்ளாட்சி இடைத்தேர்தல் நடந்த அனைத்து இடங்களிலும் பலத்த பாதுகாப்புடன் ஓட்டுப்பதிவு நடந்தது. மிகவும் பதட்டமான வாக்குச் சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் காவலுக்கு நிறுத்தப்பட்டி ருந்தனர். பதட்டமான பகுதிகளில் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர்.

மாலை 5 மணியுடன் ஓட்டுப்பதிவு முடிவடைகிறது. பின்னர் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வாக்குச்சீட்டு முறையில் ஓட்டுப் பதிவு நடத்த வாக்குச்சாவடிகளில் உள்ள ஓட்டுப்பெட்டிகள் ஏஜெண்டுகள் முன்னிலையில் சீல் வைக்கப்படுகின்றன. அதன்பிறகு பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் மையங்களுக்கு கொண்டு போகப்படுகிறது. 22–ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடை ஏபெறுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply