தமிழகக் கைதிகளை இந்தியாவிடம் ஒப்படையுங்கள்: சுவாமி கடிதம்
இலங்கையில் போதைப் பொருள் கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஐந்து தமிழக மீனவர்களையும் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து “தினமணி´ நிருபரிடம் சுப்பிரமணியன் சுவாமி கூறியதாவது: கொழும்பில் நவம்பர் 24-ம் திகதி நடைபெறவுள்ள அதுலத்முதலி நினைவுச் சொற்பொழிவு நிகழ்வில் “சார்க் சீர்திருத்தமும் உலகமயமாக்கலும்´ என்ற தலைப்பில் பேசவுள்ளேன்.
அப்போது இலங்கை ஜனாதிபதியை சந்தித்து தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்படும் விவகாரம் குறித்து விரிவாகப் பேசவுள்ளேன்.
போதைப் பொருள் கடத்தியதாக ஐந்து தமிழக மீனவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. அவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அந் நாட்டு ஜனாதிபதிக்கு வெள்ளிக்கிழமை கடிதம் எழுதியுள்ளேன்.
தண்டனை விதிக்கப்பட்ட இரு நாட்டு கைதிகளை பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளும் வகையில், 2010-ஆம் ஆண்டில் மஹிந்த ராஜபக்ஷ டெல்லி வந்தபோது இந்தியாவும் இலங்கையும் உடன்படிக்கை மேற்கொண்டன.
அதன் அடிப்படையில் இந்தியாவில் தண்டனை விதிக்கப்பட்ட ஓர் இலங்கை நாட்டவரை நமது நாட்டு அரசு இலங்கையிடம் ஒப்படைத்தது. அவர் மீதான மேல்முறையீடு வழக்கு அந்த நாட்டு நீதிமன்றத்தில் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், இதே நடைமுறையை தற்போது தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் விவகாரத்திலும் கடைப்பிடிக்க வேண்டும்.
அவர்களை டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைத்து அவர்களுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு இந்திய உச்ச நீதிமன்றத்தில் நடத்த ஒத்துழைக்க வேண்டும் என்று இலங்கை ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளேன்´ என்றார் சுப்பிரமணியன் சுவாமி.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply