சோதனை ஓட்டத்தின் போது விபத்து: விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் விமானம் விழுந்து நொறுங்கியது-பைலட் பலி
அமெரிக்காவின் விர்ஜின் கேலக்டிக் நிறுவனத்தின் விண்வெளிக்கு செல்லும் விமானமான ஸ்பேஸ் ஷிப்2, தனது சோதனை ஓட்டத்தின் போது வெடித்து சிதறியதில் விமானி ஒருவர் பலியானார். மற்றொரு விமானி படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கலிபோர்னியாவில் உள்ள மோஜெவ் பாலைவனத்தில் இருந்து ஸ்பேஸ் ஷிப்2 என்று பெயரிடப்பட்ட இந்த விமானம் சோதனை ஓட்டத்திற்காக புறப்பட்ட சிறிது நேரத்திற்குள்ளாகவே, இரண்டு துண்டுகளாக வெடித்து சிதறியது. ஸ்பேஸ் ஷிப்2 விண்கலத்தை சுமந்த விமானம் வானில் சென்று கொண்டிருந்தபோது, அதிலிருந்து விண்ணில் தனியாக பிரிந்து செல்வது போல் திட்டமிடப்பட்டது. அதன்படி சுமந்து சென்ற விமானத்திலிருந்து பிரிந்தவுடன் இரு நிமிடங்களிலேயே அது வெடித்து சிதறியது.
அப்போது விமானத்தில் இருந்த இரு விமானிகளில் ஒருவர் காக்பிட்டிலிருந்து வெளியேறி பாரசூட் உதவியுடன் பறந்து தரையிறங்கினார். எனினும் அவரும் பலத்த காயமடைந்தார். மற்றொரு விமானி விமானத்திலேயே சிக்கி உயிரிழந்தார். இது வரை ரப்பர் சார்ந்த புரொபெல்லண்ட் கொண்டு இயக்கப்பட்ட இந்த விமானங்கள் இம்முறை திட பிளாஸ்டிக் எரிபொருள் கொண்டு இயக்கப்பட்டது. விபத்து நடந்த இடத்திற்கு விர்ஜின் கேலக்டிக் நிறுவனர் ரிச்சர்ட் பிரான்சன் சென்று கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விமானத்தில் விண்வெளி சுற்றுலா செல்ல லேடி காகா, ஜஸ்டின் பைபர் மற்றும் கேத்தி பெர்ரி உள்ளிட்ட 700 பேர் பதிவு செய்துள்ளனர். இதற்கான நுழைவு கட்டணமாக ஒவ்வொருவரும் 250000 டாலர் செலுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply