லிபியாவில் 25 கேரள நர்சுகள் சிக்கித் தவிப்பு: மத்திய அரசு உதவி செய்ய கோரிக்கை

லிபியாவின் பெங்காசி நகரத்தில் சிக்கித் தவிக்கும் 25 கேரள நர்சுகள் இந்திய அதிகாரிகள் உதவியை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். ராணுவத்திற்கும் கிளர்ச்சியாளர்களுக்குமிடையே உக்கிரமான மோதல் நடைபெற்று வரும் நிலையில், பெங்காசியில் 25-க்கும் மேற்பட்ட கேரள நர்சுகள் வெளியில் வர முடியாமல் தவிக்கின்றனர். அவர்கள், தங்களை மீட்டு நாடு திரும்ப ஏற்பாடு செய்ய வேண்டும் என இந்திய தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.அங்குள்ள நர்சுகளில் ஒருவரான சவீதா என்பவர் மலையாள தொலைக்காட்சிக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

“என்னுடன் 25-க்கும் மேற்பட்ட நர்சுகள் பல்வேறு மருத்துவமனைகளில் வேலை பார்த்தோம். ராணுவம்- கிளர்ச்சியாளர்கள் மோதல் காரணமாக பல மருத்துவமனைகள் மூடப்பட்டன. இதனால், எங்களை அழைத்து வந்து பெங்காசி மெடிக்கல் சென்டரில் தங்க வைத்துள்ளனர். கடினமான சூழ்நிலையிலும் ஆழ்ந்த கவலையுடனும் இங்கு வசித்து வருகிறோம். இந்திய தூதரகத்திற்கு தகவல் தெரிவித்தும், இதுவரை உதவி செய்யவில்லை” என்று சவீதா கூறியிருக்கிறார்.

இதுபற்றி மத்திய வெளியுறவுத்துறை மற்றும் இந்திய தூதரகத்திற்கு கேரள அரசு தகவல் தெரிவித்து, நர்சுகளை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது. இந்திய தூதரை தொடர்பு கொண்டு முதலமைச்சர் உம்மன் சாண்டி பேசியுள்ளார்.

இதேபோல், கடந்த ஜூலை மாதம், ஈராக்கில் சிக்கித் தவித்த 46 நர்சுகளை பத்திரமாக மீட்டு கேரளாவுக்கு கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply