ஜெயலலிதா வழக்கை விசாரிக்க தனி நீதிபதியை நியமிக்க வாய்ப்பு: 18–ந்தேதி சுப்ரீம்கோர்ட்டு உத்தரவில் தெரியும்
சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்– அமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் பெங்களூர் தனி நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்தது. இவர்கள் 4 பேரும் தங்களை ஜாமீனில் விடக்கோரி கர்நாடக ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் சுப்ரீம்கோர்ட்டில் முறையிட்டு அங்கு ஜாமீன் பெற்றனர். சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தத்து, நீதிபதி லோக் கூர், சிக்ரி ஆகியோர் கடந்த அக்டோபர் 17–ந்தேதி ஜாமீன் வழங்கி இருந்தனர்.
ஜெயலலிதா அப்பீல் வழக்கை இழுத்தடிக்கக் கூடாது என்றும் விரைவில் வழக்கை முடிக்க, தேவையான ஆவணங்களை கர்நாடக ஐகோர்ட்டில் சமர்பிக்க வேண்டும் என்றும் கூறி இருந்தனர். இதன்படி கர்நாடக ஐகோர்ட்டில் ஜெயலலிதா தரப்பில் ஆவணங்கள் அனைத்தும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது.
கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு ஆவணங்களை சரி பார்த்த பிறகு அதற்கு நம்பர் வழங்கி எந்த நீதிபதி விசாரிக்க வேண்டும் என்று பட்டியலிடுவார்கள்.
இந்த சூழ்நிலையில் ஜெயலலிதா உள்பட 4 பேரும் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வருகிற 18–ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது.
அப்போது நீதிபதிகள் அதிரடியாக என்ன உத்தரவு பிறப்பிப்பார்கள் என்ற எதிர் பார்ப்பு எழுந்துள்ளது.
கர்நாடக ஐகோர்ட்டில் ஜெயலலிதா அப்பீல் வழக்கை துரிதமாக 3 மாதத்திற்குள் நடத்தி முடிக்க தனி நீதிபதியை நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வாறு தனி நீதிபதி நியமிக்கப்பட்டால் அந்த நீதிபதி யாராக இருக்கும்? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
சாதாரணமாக ஐகோர்ட்டில் அப்பீல் வழக்கு நடைபெற்றால் அந்த வழக்கு முடிய குறைந்தது 4 ஆண்டு ஆகும் என்பதால் ஜெயலலிதா வழக்கில் தனி நீதிபதி மூலம் தினமும் வழக்கை நடத்தி முடிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பிக்கும் என்று மூத்த வக்கீல்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் ஜெயலலிதா உள்பட 4 பேருக்கும் வழங்கிய ஜாமீனை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் சுப்ரீம்கோர்ட்டில் மற்றொரு மனுவை வக்கீல் ராஜாராமன் தாக்கல் செய்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:–
ஜெயலலிதா முன்னாள் முதல்–அமைச்சர் என்பதால் ஜாமீன் வழங்கப்பட்டிருந்தாலும் சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு எந்த அடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்டது என்று அந்த மனுவில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
எனவே ஜெயலலிதா உள்பட 4 பேரின் ஜாமீன் மனுவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய மனு தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply