மோதல் முடிந்த பின்னர் இலங்கையில் குற்றச்செயல்கள் கணிசமாக குறைவு : அஜித் ரோஹண
இலங்கையில் மோதல் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து குற்றச் செயல்கள் கணிசமானளவு குறைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார். எனினும் சனத்தொகை பெருக்கம், நகரமயமாக்கல், தொழிற்சாலை உருவாக்கம், சுற்றுலாத்துறை வளர்ச்சி காரணமாக இடம்பெறக்கூடிய குற்றச் செயல்களை முடிவுக்குக் கொண்டு வருவதென்பது எந்தவொரு நாட்டுக்கும் இயலாத காரியமென சுட்டிக்காட்டிய அவர், இலங்கையில் குற்றச் செயல்கள் அதிகரிக்கவில்லை என உறுதியாக கூறினார்.
தகவல் திணைக்களத்தில் நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது அவர் இதனைக் கூறினார்.
நாட்டில் மோதல் உச்சத்திலிருந்த 2004 ஆம் ஆண்டு 56 ஆயிரத்து 982 ஆகவிருந்த குற்றச் செயல்கள் 2014 ஆம் ஆண்டில் 43 ஆயிரத்து 436 ஆக குறைவடைந்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை பாரிய கொலைச் சம்பவங்கள் 21 சதவீதத்தால் குறைவடைந்திருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். 2004 ஆம் ஆண்டில் இடம்பெற்ற 1288 மனித கொலைகள் 2014 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களுக்குள் 468 ஆக குறைவடைந்துள்ளதெனவும் அவர் கூறினார்.
இதேபோன்று வீடு உடைத்தல், திருடுதல் ஆகியவற்றின் எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டிருக்காத போதிலும் பொலிஸ் திணைக்களம் சரியான முறையில் முறைப்பாடுகளை கையாண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். ஐரோப்பா, ஆபிரிக்கா மற்றும் ஆசியா ஆகிய கண்டங்களுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் ஒப்பீட்டளவில் மிகவும் குறைந்த எண்ணிக்கையான குற்றச் செயல்களே இடம்பெறுகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.
பாதாள உலகக் கோஷ்டியினை நாம் மோதலுக்குப் பின்னர் முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம். குழந்தையை கடத்திச் சென்றவர்களை எமது தந்திரோபாயங்களை பயன்படுத்தி மட்டக்கிப்பிடித்தோம். தலைக்கவசம் அணிந்து வந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட எவரையும் நாம் காலம் கடந்தாயினும் கையும் மெய்யுமாக கைது செய்தோம்.
இலங்கை வரலாற்றிலேயே 2013 முதல் 2014 ஆம் ஆண்டிற்குள் அதிகளவான போதைப் பொருளை நாம் கைப்பற்றினோம். இதற்கு முன்னரும் இதே அளவிலான போதைப் பொருள் நாட்டிற்குள் வராமலில்லை. எனினும் எமது பொலிஸ் திணைக்களத்தின் திட்டமிட்ட செயல் மூலம் எம்மால் இவற்றை இன்று கைப்பற்ற முடிந்துள்ளது.
இதற்காக உள்நாட்டு குடிவரவு குடியகல்வு திணைக்களம், பொலிஸ் போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவு சுங்க அதிகாரிகள் ஆகிய அனைத்து தரப்பினரும் எமக்கு ஒத்துழைப்பு வழங்கினர்.
ஹெரோயின் கடத்தலுக்கு நாம் ஏற்படுத்தியிருக்கும் நெருக்கடி காரணமாக 60 இலட்சமாக இருந்த ஒரு கிலோ ஹெரோயின் தற்போது ஒரு கோடி ரூபாவிற்கு விலையேறியுள்ளது.
போதைப்பொருள் கடத்தலுடன் சர்வதேச வலையமைப்புடன் தொடர்புபட்ட 13 பேரை நாம் கைது செய்துள்ளோம். வெலேகதா, மொஹமட் சித்தி ஆகியோர் நாட்டை விட்டு எங்கும் தப்பிச் செல்ல இயலாதபடி சிவப்பு அறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளதெனவும் அவர் கூறினார்.இச்செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி பிரதீபா மஹாநாம, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜனாதிபதி சட்டத்தரணி வெதகே தந்த ரொட்ரிகோ ஆகியோர் உரையாற்றுகையில், இலங்கையில் பொலிஸ் திணைக்களம் மிகவும் திறமையாக செயற்படுவதாக தெரிவித்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply