ஐகோர்ட்டு உத்தரவின்படி ஹாங்காங்கில் போராட்ட முகாம்கள் கலைப்பு

ஐகோர்ட்டு உத்தரவுக்கிணங்க ஹாங்காங்கில் போராட்ட முகாம்கள் கலைக்கப்பட்டன. கண்கலங்க போராட்டக்காரர்கள் விடைபெற்றனர். இங்கிலாந்தின் காலனியாக திகழ்ந்து வந்த ஹாங்காங், 1997-ம் ஆண்டு, ஜூலை மாதம் 1-ந்தேதி முதல் சீனாவின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. ஹாங்காங்கின் ஆட்சியாளராக லீயுங் சன் யிங் உள்ளார். 2017-ம் ஆண்டு, ஹாங்காங்கில் புதிய ஆட்சியாளரை தேர்வு செய்ய தேர்தல் நடத்துவதாக சீனா அறிவித்துள்ளது. ஆனால் யார் வேட்பாளர் என்பதை தாங்கள்தான் முடிவு செய்வோம் என சீனா கூறியது. இது ஹாங்காங்கில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மாணவர்கள், பொதுமக்கள் ஓரணியில் திரண்டு, அரசு நிர்வாக எந்திர தலைமையகமாக செயல்பட்டு வருகிற அட்மிரால்டியில் சாலைகளை முற்றுகையிட்டு, முகாம்கள் அமைத்து, முழுமையான ஜனநாயக உரிமைகள் வழங்கக்கோரி 3 மாத காலமாக போராட்டம் நடத்தி வந்தனர். இந்த போராட்டங்கள் சட்டவிரோதமானவை என சீனா அறிவித்தது.

அவ்வப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன. கடந்த 2 மாதங்களில் 655 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். 129 அதிகாரிகள் காயம் அடைந்தனர். இந்தப் போராட்டம், சீனாவுக்கு சவாலாக அமைந்தது.

இந்த நிலையில் போராட்டத்துக்கு எதிராக ஹாங்காங் ஐகோர்ட்டில் ஒரு பஸ் நிறுவனம் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அட்மிரால்டியில் போராட்டக்காரர்களையும், அவர்களது முகாம்களையும் 3 நாளில் காலி செய்யுமாறு உத்தரவிட்டது.

ஐகோர்ட்டு விதித்த கெடுவின் இறுதி நாளான நேற்று போராட்டக்காரர்கள் சாலைகளில் அமைத்திருந்த முகாம்கள் கலைக்கப்பட்டன.

போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில், தொழிலாளர்கள் தடுப்பு வேலிகளை, கூடாரங்களை மெதுவாகவே அகற்றினார்கள். அவற்றை பார்க்க ஏராளமான கூட்டம் கூடியது. பத்திரிகையாளர்களும், புகைப்படக்காரர்களும் செய்தி சேகரிக்கவும், படம்பிடிக்கவும் குவிந்தனர்.

கூடாரங்களை அகற்றியபோது சற்றே எதிர்ப்பு கிளம்பியது. போராட்டக்காரர்கள் தங்களது தலையணைகள், போர்வைகள், இதர பொருட்களை எடுத்துக்கொண்டு சென்றனர்.

20 வயதான லூசி டாங் என்ற மாணவர், போராட்டக்களத்தில் இருந்து புறப்பட்டபோது, “நிச்சயமாக இதை மறக்க முடியாது. இந்த இடத்தை நான் தவற விடுவதாகத்தான் நினைக்கிறேன். இது எனது வீடாகவே ஆகி விட்டது” என கூறினார்.

பலர் கண்கள் கலங்க போராட்டக்களத்தில் இருந்து புறப்பட்டனர்.

இதுபற்றி தொழிலாளர் கட்சி எம்.பி. லீ செயுக் கூறும்போது, “ஹாங்காங்கில் இந்தப் போராட்டம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்திவிட்டது. இதுவரை அரசியலில் ஆர்வம் இல்லாமல் இருந்த மக்கள், இப்போது கைது ஆவதற்கு கூட பயப்படவில்லை. குறிப்பாக இளைய தலைமுறையினரிடம் அச்சமே இல்லை” என்றார்.

ஹாங்காங்கில் இப்போது இந்தப் போராட்டம் நீதிமன்ற உத்தரவுக்கிணங்க முடிவுக்கு வந்துள்ளது. ஆனாலும் இது வேறு வடிவத்தில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்க வாய்ப்புகள் உள்ளதாக சர்வதேச நோக்கர்கள் கருதுகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply