நிறைவேறாத வாக்குறுதிகளை நம்பி ஐ.தே.க வை ரணில் தாரைவார்த்துவிட்டார்
நிறைவேற்று வாக்குறுதிகளை வழங்கியவர்களை நம்பி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியையே தாரைவார்த்துவிட்டார் என அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். நம்பிக்கை வைக்க முடியாத, வெற்றி பெற முடியாதவர்களை நம்புவது மடமை என சிந்தித்தே தாம் ஜனாதிபதியுடன் இணைந்து கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தன்னிச்சையாக மைத்திரிபால சிறிசேன மேற்கொள்ளும் கட்சிகளுக்கிடையிலான ஒப்பந்தங்கள் நாட்டில் மோசமான சூழ்நிலையையே ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டார்.
அநுராதபுரத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டுஉரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பிரதமர் டி.எம்.ஜயரட்ன உட்பட அமைச்சர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
அநுராதபுரத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் திரண்டுள்ள இலட்சக்கணக்கான மக்களைப் பார்க்கும் போது எதிர்வரும் ஜனவரி 8ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாவதை எவராலும் தடுக்க முடியாது என்பது உறுதியாகிவிட்டது.
நான் அக்காலத்திலிருந்தே பரம்பரை ஐ.தே.க. ஆதரவாளர்தான். ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதையே நான் எதிர்பார்த்திருந்தேன். எனினும் ஐக்கிய தேசியக் கட்சியினால் கட்சியின் சொந்த அபேட்சகரை நிறுத்திக்கொள்ள முடியாமற் போயுள்ளது. அந்தளவு வங்குரோத்து நிலையை அக்கட்சி அடைந்துள்ளது.
இம்முறை ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி அபேட்சகர் என்ற வகையில் பல இடங்களில் ஒப்பந்தங்கள் கைச்சாத்திட்டு வருகின்றமை ஆரோக்கியமானதல்ல.
கடந்த வாரத்தில் அவர் ஐ.தே.க. மற்றும் ஐ.தே.க. ஆதரவு கட்சிகளிடையே புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டார். அது பற்றி மக்களுக்குத் தெளிவுபடுத்தவுமில்லை. அது மட்டுமின்றி ஹெல உறுமய கட்சியோடும் பல உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டார். அதனையடுத்து சில தினங்களுக்கு முன்பு தமிழ், தேசிய கூட்டமைப்போடு உடன்படிக்கையொன்றில் பல இடங்களில் திருட்டுத்தனமாக ஒப்பந்தம் கைச்சாத்திடுவது என்பது மோசமானதொன்றாகும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் செய்து கொண்ட உடன்படிக்கை எந்த நிபந்தனையுமின்றி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது வடக்குக்குத் தனியான பொலிஸ், காணி, மற்றும் நிர்வாக அதிகாரங்களைக் கோரியுள்ளது. மக்களுக்குத் தெரியாமல் இத்தகைய உடன்படிக்கையில் மைத்திரிபால கையொப்பமிடுவாரானால் அவர் வெற்றி பெற்றால் நாட்டில் என்ன நடக்கும் என்பது தெளிவாகிறது. இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.
மைத்திரிபால சிறிசேன இலங்கையின் ஜனாதிபதியாவது நாட்டு மக்களின் எதிர்பார்ப்பல்ல. மாறாக மேற்கத்தைய நாடுகளினது எதிர்பார்ப்பே என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இதன் பின்புலத்தில் இருந்து கொண்டு செயல்படுவதும் தலைமைத்துவம் வழங்குவதும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவே. இந்த அணி வெற்றிபெற்றால் நாட்டுக்கு என்ன நடக்கும் என்பதை மக்கள் உணர வேண்டும். இது மிக பயங்கரமான சூழலையே நாட்டில் ஏற்படுத்தும்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு உண்மையான அன்பை செலுத்தியவர்களும் அக்கட்சிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்களும் இத்தகைய வெற்றுக் கொள்கைகளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி அபேட்சகராக நியமிக்கப்பட்டது. முதல் இதுவரை கட்சியின் பொதுச் செயலாளர் என்ற வகையில் என்னை ஒரு தடவையாவது சந்தித்ததில்லை. அதற்கான அவசியமும் அவருக்கு இருந்ததில்லை.
ரணில் விக்கிரமசிங்க ஐ.தே.க. செயற்குழுவில் மைத்திரிபால சிறிசேனவின் பெயரைக் குறிப்பிடுகையில் ஐக்கிய தேசியக் கட்சியினர் தொடர்பில் அவர் வழங்கிய உறுதிமொழி என்ன என்றும் கட்சித் தலைவரைக் கேட்டோம். அதற்கு அவர் கூறிய பதில், வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கு முன் அரசாங்கத்திலிருந்து 20 பேரை ஐக்கிய தேசிய கட்சிக்குக் கொண்டுவருவதாக மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார் என்பதே. டிசம்பர் 8ம் திகதி முடிந்து வேட்பு மனுத் தாக்கல் செய்துமாயிற்று அவர் கூறியபடி அமைச்சர்கள் 20 பேரை இங்கு கூட்டிவர முடியாமல் போனது.
இரண்டாவதாக ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிரதமர் பதவி வழங்குவதாக கூறியுள்ளார். அது எந்தளவு நம்பிக்கையான உறுதி மொழி என்பது தெரியாது. சந்திரிகாவின் உறுதி மொழிகளை நம்ப முடியுமா? அதனை ஏற்க முடியாது.
2004 இல் நாம் அரசாங்கத்தில் இருந்த போது வழங்கிய வாக்குறுதி எதையும் அவர் நிறைவேற்றவில்லை. ஐ.தே.க. அரசைக் கலைக்கப்போவதில்லை என்ற உறுதி மொழியை 24 மணித்தியாலத்தில் பொய்யாக்கியவர் அவர்.
நம்பிக்கை வைக்க முடியாத, வெற்றி பெறவும் முடியாத நபர் மீது நம்பிக்கை வைப்பது மடமை என சிந்தித்தே நான் ஜனாதிபதியுடன் பேசினேன். அவர், மீண்டும் நான் ஜனாதிபதியாகுவேன் என உறுதியாகத் தெரிவித்தார்.
அது மட்டுமன்றி “நான் கட்டியெழுப் பிய இந்த அரசாங்கத்தை வீழ்த்த எவருக்கும் இடமளிக்கப் போவதி ல்லை” என்றும் தெரிவித்தார். குறுகிய காலத்தில் அவர் பெற்ற வெற்றிகளை இல்லாதொழிக்க இடமளிக்கக்கூடாது என்றும் அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply