தீவிரவாத தாக்குதல்கள் முடிவுக்கு வரவேண்டுமானால் பாகிஸ்தானுக்கு பலத்த அடி கொடுக்க வேண்டும்: ராணுவ மந்திரி பேச்சு

பாகிஸ்தானை தலைமையகமாகக் கொண்டு செயல்படுகிற தீவிரவாதிகள், காஷ்மீரில் தொடர்ந்து தீவிரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறார்கள். இதனால் ஏதுமறியாத அப்பாவி பொதுமக்களும் களப்பலி ஆகிறார்கள். மூன்றாவது கட்ட சட்டசபை தேர்தலை சந்திக்க இருந்த நிலையில், இந்த மாதத்தின் தொடக்கத்தில் ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் பாதுகாப்பு படையினர் உள்பட 20 பேர் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர், அங்கு சென்று நிலைமையை நேரில் ஆராய்ந்து வந்தார். இந்த நிலையில், டெல்லியில் ‘டி.வி. டூடே’ குழுமத்தின் சார்பில் நடத்தப்பட்ட மாநாட்டில் மனோகர் பாரிக்கர் நேற்று கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவுக்குள் பாகிஸ்தான் தீவிரவாதிகளை அனுப்பிக்கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு பலத்த பதிலடி கொடுக்கப்பட வேண்டும் என்பது என் ஆணித்தரமான கருத்து.

எல்லாவற்றையும் ஒருயடியாய் முடிவுக்கு கொண்டு வரவேண்டுமானால், கொஞ்சம் வலுவான பதிலடி தந்தே ஆக வேண்டும். அப்போதுதான் அப்பட்டமான தாக்குதல்கள் கொஞ்சம் குறையவாவது செய்யும்.

ராணுவ கொள்முதல் குறித்த புதிய கொள்கையை மத்திய அரசு வகுத்து அளிக்கும். பாதுகாப்பு படைகள் நவீனமயம் என்ற பெயரிலான தந்திர யுக்திகள் பற்றியும் அதில் குறிப்பிடப்படும். லஞ்சத்துக்கு இடம் இருக்காது. ராணுவ தரகர்கள், இடைத்தரகர்களை சட்டப்பூர்வமாக்குவது குறித்து செயலாற்றி வருகிறோம்.

ஒரு பாதுகாப்பு படை வீரர் தனது துப்பாக்கியில் குண்டுகளை ஏற்றும்போது, உயிரிழப்பதை என்னால் ஏற்கவே முடியாது. ராணுவ அமைச்சகத்தில் பொறுப்பினை ஏற்கும் நிலை கொண்டு வருவோம்.

ராணுவ கொள்முதல்களில் உறுதியான கொள்கை ஜனவரி மாதம் தயாராகி விடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவர் கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.

அப்போது, “இத்தகைய தாக்குதல்களை தடுப்பதற்கு உங்களது அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது?” என்று மனோகர் பாரிக்கரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், “நாங்கள் என்ன செய்திருக்கிறோம் என்பதை 6 மாதங்கள் கழித்து என்னிடம் கேளுங்கள்” என பதில் அளித்தார்.

ராணுவத்தில் ஒரு பதவி, ஒரு ஓய்வூதியம் என்ற திட்டம் அமல்படுத்துவது குறித்த கேள்விக்கு மனோகர் பாரிக்கர், “இந்த கொள்கையை அமல்படுத்துவது பற்றி மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இதுகுறித்த அறிவிப்பு இன்னும் 4 முதல் 8 வாரங்களுக்குள் வரும்” என பதில் கூறினார்.

மற்றொரு கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், “எனது தலைமையிலான ராணுவ கொள்முதல்கள் துரிதமாகவும், வெளிப்படையாகவும் நடக்கும்” என கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply