எகிப்தில் ஐ.எஸ். பிரிவு பயங்கரவாதிகள் தாக்குதல்: 30 வீரர்கள் பலி
எகிப்து நாட்டில், பதற்றம் நிறைந்த சினாய் பகுதியில் பயங்கரவாதிகள் வியாழக்கிழமை நிகழ்த்திய பயங்கரவாதத் தாக்குதல்களில் 27 ராணுவ வீரர்களும், 3 காவலர்களும் உயிரிழந்தனர். அந்தத் தீபகற்பப் பகுதியில் அமைந்துள்ள ராணுவ முகாம்களிலும், காவல் நிலையங்களிலும் கார் வெடிகுண்டுகள், சிறிய வகை ஏவுகணைகளைக் கொண்டு இந்தத் தொடர் தாக்குதலில் பயங்கரவாதிகள் ஈடுபட்டனர். கடந்த சில மாதங்களில், எகிப்தில் நிகழ்த்தப்பட்ட மிக பயங்கரமான தாக்குதல் இது எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து எகிப்து ஊடகங்கள் தெரிவித்ததாவது:
வடக்கு சினாய் மாகாணத்தின் தலைநகர் எல்-ஆரிஷில் அமைந்துள்ள காவல் துறை தலைமையகத்தின் மீதும், ஒரு ராணுவ முகாம் மீதும் பயங்கரவாதிகள் தாக்குதல் நிகழ்த்தினர்.
சிறிய வகை ஏவுகணைகளையும், கார் வெடிகுண்டுகளையும் இந்தத் தாக்குதல்களுக்கு போலீஸார் பயன்படுத்தினர்.
இதில், 25 ராணுவ வீரர்களும், ஒரு காவலரும் உயிரிழந்தனர். 60 பேர் காயமடைந்தனர் என ஊடகங்கள் தெரிவித்தன.
மற்றொரு சம்பவத்தில், காஸா பகுதி எல்லையையொட்டி அமைந்துள்ள ரஃபா நகரில், ராணுவச் சாவடி ஒன்றின் மீது நிகழ்த்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் ராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.
இந்தத் தாக்குதல்களுக்கு, இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பின் எகிப்து நாட்டுப் பிரிவான அன்ஸார் பீட் அல்-மக்திஸ் பொறுப்பேற்றது.
இந்தத் தொடர் தாக்குதலைத் தொடர்ந்து, ஆப்பிரிக்க யூனியன் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக எத்தியோப்பியா சென்றிருந்த எகிப்து அதிபர் அப்துல் ஃபட்டா அல்-சிசி, தனது பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு நாடு திரும்பினார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அன்ஸார் பீட் அல்-மக்திஸ் நிகழ்த்திய பயங்கரவாதத் தாக்குதலில் 33 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
அதற்குப் பிறகு, அந்த நாட்டில் ராணுவ வீரர்கள் மீது நிகழ்த்தப்பட்ட மிகப் பயங்கரமான தாக்குதல் இது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply