மாயமான விமானத்தைக் கண்டுபிடித்தே தீருவோம்: மலேசியப் பிரதமர்

இந்தியப் பெருங்கடலில் 239 பேருடன் மாயமான மலேசிய ஏர்லைன்ஸ் எம்.ஹெச்.370 விமானத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சி தொடரும் என, அந்த விமானத்திலிருந்தவர்களின் உறவினர்களிடம் மலேசியப் பிரதமர் நஜீப் ரஸாக் வெள்ளிக்கிழமை உறுதியளித்தார். இதுகுறித்து முகநூல் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவுகளில் தெரிவித்துள்ளதாவது: எம்.ஹெச்.370 விமானத்திலிருந்தவர்களின் உறவினர்களுடைய மன உணர்வுகளை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அந்த விமானத்தைத் தேடும் பணி தொடரும்.

மலேசியா, ஆஸ்திரேலியா, சீனா ஆகிய நாடுகள், அந்த விமானத்தைக் கண்டுபிடித்தே தீருவது என உறுதி பூண்டுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோலாலம்பூரிலிருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங் நோக்கி கடந்த ஆண்டு மார்ச் 8-ஆம் தேதி சென்ற மலேசிய ஏர்லைன்ஸýக்குச் சொந்தமான எம்.ஹெச்.370 விமானம் நடுவானில் மாயமானது. சர்வதேச நாடுகளின் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகும், அந்த விமானம் குறித்து கண்டறிய முடியவில்லை.

இதனால் அந்த விமானம் தெற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் விழுந்ததாக மலேசிய அரசு மார்ச் 24-ஆம் தேதி அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து தென்சீனக் கடல், அந்தமான் கடலுக்கு இடையில் விமானத்தைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், அந்த விமானம் விபத்துக்குள்ளானதாக சட்டப்பூர்வ அறிவிப்பை மலேசிய அரசு வியாழக்கிழமை வெளியிட்டது.

இதன்மூலம், அந்த விமானத்தில் பயணம் செய்தவர்களின் ஆயுள்காப்பீடு உள்ளிட்ட நிவாரணங்களைப் பெறுவதில் இருந்த சட்டச் சிக்கல்கள் நீங்கும் எனக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, விமானத்தில் இருந்த ஹிந்துக்களின் ஆன்மா சாந்தியடைவதற்காக, அவர்களின் உறவினர்கள் கர்ம காரியங்கள் செய்ய வேண்டும் என மலேசிய ஹிந்து சங்கத்தின் தலைவர் மோகன் ஷான் வலியுறுத்தியுள்ளார்.

அந்த விமானத்தில் பயணம் செய்த சேத்தனா கோலோகர், ஸ்வானந்த் கோலேகர், சுரேஷ் கோலேகர், சந்திரிகா சர்மா, பிரகலாத் ஷீர்சாதா ஆகியோர் ஹிந்துக்கள் ஆவர்.

முன்னதாக, மாயமான விமானத்திலிருந்த முஸ்லிம்களுக்காக வெள்ளிக்கிழமை தொழுகையின்போது பிரார்த்தனை மேற்கொள்ளுமாறு மலேசிய முஸ்லிம்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply