கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா இன்று
கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா இன்று 28 ஆம் திகதி மிக விமரிசையாக ஆரம்பமாகிறது. இலங்கை – இந்திய கிறிஸ்தவ மக்களின் புனித தலமாக கருதப்படுகின்ற கச்சதீவு அந்தோனியார் ஆலய உற்சவத்திற்கென இம்முறை தமிழகத்திலிருந்தும் இலங்கையிலிருந்தும் சுமார் 7000 பேர் வரவுள்ளதாக யாழ். அரச அதிபர் அலுவலகம் தெரிவிக்கிறது. தமிழகத்திலிருந்து கச்சதீவுக்கு சுமார் 105 படகுகளில் அடியார்கள் வருவதற்கு ஆயத்தமாகியுள்ளதுடன் கடந்த 25ஆம் திகதி மேற்படி 105 படகுகளையும் தமிழக கரையோர பாதுகாப்பு பிரிவினர் சோதனையிட்டு செல்வதற்கான தகுதியுடையன என்று தெரிவித்தனர்.
இன்று 28ஆம் திகதி ஆரம்பமாகும் கச்சத்தீவு புனித அந்தோனியார் உற் சவம் நாளை 1 ஆம் திகதிவரை நடைபெறுகிறது.
கச்சதீவு திருவிழா ஏற்பாடுகள் தொடர்பில் யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் தொடர்பாக யாழ். அரச அதிபர் தெரிவிக்கையில்.
கச்சதீவு அந்தோனியார் ஆலய திரு விழா இன்று 28ஆம் திகதி மாலை 4 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்ப மாகி, மறுநாள் மார்ச் மாதம் முதலாம் திகதி காலை 7 மணிக்கு பெருவிழா வாக நடைபெறும். இந்த திருவிழாவில் பங்கு கொள்வதற்காக இந்தியாவி லிருந்து 5,000 பேரும் இலங்கையிலிருந்து 2,000 பேரும் பதிவுகளை மேற் கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து இன்று 28ஆம் திகதி அதிகாலை 4 மணியிலிருந்து இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் வண்டிகள் சேவைகள் ஆரம்பிக்கும். அதிகாலை 5 மணியிலிருந்து தனியார் பஸ் சேவை ஆரம்பிக்கப்படும். இதற் கான கட்டணமாக 72 ரூபாய் அற விடப்படும். படகு சேவையில் ஒரு வழிப்பயணத்துக்கு 225 ரூபாய் அறவிடப்படும். இந்த படகுசேவை காலை 6 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணிவரை நடைபெறும்.
கச்சதீவு திருவிழா நடைபெறும் தினத்தில் 150 பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுவார்கள். அம்பியூலன்ஸ் சேவையும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
28ஆம் திகதி இரவு உணவும் மார்ச் முதலாம் திகதி காலை உணவும் கடற்படையினரால் வழங்குவதற்கான ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளன. ஆலயத்துக்கு செல்பவர்கள் ஆலய சூழலை சுகாதாரமாக பேணுவதுடன், பிளாஸ்ரிக், பொலித்தீன் பாவனையை தடைசெய்யுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இன்று அதிகாலை முதல் கச்சதீவு நோக்கி தமிழகத்திலிருந்து வரும் படகுகளுக்கும் இலங்கையிலிருந்து கச்சதீவு நோக்கி செல்லும் படகுகளுக்கும் கடற்படை படகுகள் விசேட பாதுகாப்பு வழங்குவதுடன் கச்சதீவுக்குள் உணவு, குடிநீர் மற்றும் உயிர்காப்பு நடவடிக்கைகளில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
குறிக்காட்டுவானிலிருந்து இன்று காலை அரச அதிகாரிகளுக்காக விசேட படகுச் சேவையொன்று ஆரம் பிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு சிறப்பு திருப்பலி, சிலுவை பாதை பூஜை நடக்கிறது. 1 ஆம் திகதி காலை திருப்பலி பூஜை முடிந்ததும், கொடி இறக்கப் படும். விழாவில், இலங்கை யாழ்ப் பாணம் மறை மாவட்ட பிஷப், தமிழக கத்தோலிக்க பாதிரியார்கள் கலந்து கொள்வார்கள்.
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்திருவிழாவில் இந்த ஆண்டு தமிழ்நாட்டில் இருந்தும், சிறிலங்காவில் இருந்தும் சுமார் 7000 இற்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்கவுள்ளதாக தெரிய வருகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply