திராவிட இயக்கத்தை யாரும் அழித்து விடலாம் என்று கனவு காண வேண்டாம்: கருணாநிதி

தி.மு.க. செயற்குழு கூட்டம் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்கி பேசியதாவது:- இது எதற்காகக் கூட்டப்பட்ட செயற்குழு? புரிந்து கொள்ள வேண்டும் நீங்கள். நம்முடைய கடமைகளிலே ஒன்று, ஒரு கழகம், ஒரு இயக்கம் தன்னுடைய குழுக்களின் கூட்டத்தை அடிக்கடி கூட்ட வேண்டும் என்ற அந்த அடிப்படையில் கூட்டப்பட்ட செயற்குழு அல்ல இது. இந்தச்செயற்குழுவைக் கூட்டி, இதிலே எடுக்கப்படுகின்ற முடிவுகள், தமிழகத்திலே மட்டுமல்ல, இந்தியாவிலே மாத்திரமல்ல, ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவேண்டுமென்பதற்காக இந்தக்கூட்டத்தை நாம் கூட்டியிருக்கிறோம். இந்தக்குழுவின் வெற்றிக்கு உங்களுடைய கருத்துகள், உங்களுடைய எண்ணங்கள் எல்லாம் துணை நிற்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

செயற்குழுவிலே 12 தீர்மானங்கள் என்ற இந்த விளைவைச் சந்தித்திருக்கிறோம். இந்த விளைவுகளுக்கு பயன் நாளைக்கே கிடைக்குமா அல்லது நாளை மறுநாள் கிடைக்குமா என்பதல்ல. இந்த நாட்டில், குறிப்பாக தமிழகத்தில் உருவாகியுள்ள ஒரு ஆட்சி, நம்முடைய சமுதாய கருத்துகளுக்கெல்லாம் எதிரான ஒரு ஆட்சி. இப்போது தமிழகத்திலே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றால், அதை வரவிடுவதற்கு யார் காரணம் என்பதை அறிய வேண்டும்.

அந்தக் காரணத்தை அறிந்து, அடி வேரை, ஆணி வேரைக் கிள்ளியெறிந்தால், அந்த ஆட்சியினால் பரவுகின்ற நச்சுக்காற்று தடுக்கப்படும். அப்படித் தடுக்கப்படுவதற்கு எல்லோரும் ஒன்று சேருவோம் என்று தான் உங்களையெல்லாம் நான் அழைக்கிறேன்.

தமிழகத்திற்கு என்ன விதையைப் போடலாம் என்பதைத் தெரிந்து கொண்டு சில பேர், நம்மை விட வடக்கே இருப்பவர்களுக்கு இதிலே அறிவு அதிகம், புத்தி அதிகம். புத்திசாலித்தனமாக நடந்து கொள்கிறார்கள்.

தமிழ்நாடு என்றால், தமிழை அங்கே நாங்கள் பரப்புவோம், தமிழுக்கு ஏற்றம் தருவோம் என்று சொன்னால் தான், இங்கே தங்களுடைய கட்சியை வளர்க்க முடியும், பரப்ப முடியும், கட்சியை ஆட்சிப்பொறுப்புக்குக் கொண்டுவர முடியும் என்பதையெல்லாம் அறிந்த புத்திசாலிகள் வடக்கே இருக்கிறார்கள். வடக்கே இருப்பவர்களுக்குத் துணையாக இங்கே ஒரு கூட்டம் இருக்கிறது. அந்தக் கூட்டத்திற்குத் துணையாக சில பத்திரிகைகள் இருக்கின்றன. இவர்கள் எல்லாம் சேர்ந்து செய்கின்ற மிக முக்கியமான காரியம் என்னவென்றால், வேலை என்ன வென்றால், தி.மு.க.வை வீழ்த்துவது ஒன்று தான்.

தி.மு.க. இருக்கிற வரை நாம் தமிழ்நாட்டில் தலை காட்ட முடியாது என்று கருதுகிற காரணத்தால் தான் இந்தக்கழகத்தை எப்படி வீழ்த்தலாம் என்று திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நான் சொல்லுகிறேன், உங்களை நம்பிச் சொல்கிறேன், நாங்கள் இருக்கும் வரையில், எங்களால் வளர்க்கப்பட்ட நீங்கள் இருக்கும் வரையில், இந்தக்கழகத்தின் செயற்குழு மாத்திரமல்ல, பொதுக்குழுவிலே உள்ளவர்கள், ஊர்களிலே உள்ளவர்கள், வட்டங்களிலே உள்ளவர்கள், லட்சக்கணக்கான தி.மு.க. தொண்டர்கள், இவர்கள் எல்லாம் உள்ளவரை, திராவிட இயக்கத்தை எவனும் அழித்து விடலாம் என்று கனவு காணத்தேவையில்லை. அத்தகைய இரும்பு நெஞ்சம் கொண்டவர்கள், அத்தகைய கொள்கை உரம் வாய்ந்தவர்கள் நாம்.

அப்படிப்பட்ட இயக்கம் இன்றைக்கு காலையிலே இங்கே சில நண்பர்கள் பேசியதைப் போல நாம் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்று சொன்னார்கள் என்றால் இப்போது எங்கே போய்விட்டது ஆட்சி? ஆட்சி நம்மிடம் தான் இருக்கிறது. நாம் சொன்னபடி செய்கின்ற ஆட்சி தான் இங்கே இருக்க முடியும்.

நாம் நினைக்கிற படி நடக்கின்ற ஆட்சி தான் இங்கே இருக்க முடியும். அப்படிப்பட்ட ஆட்சியை தி.மு.க. ஏற்கனவே தந்து, அந்தக் கழகத்தின் சார்பில் ஆட்சி நடத்தி நாம் கொண்டு வந்த திட்டங்களை நாம் உருவாக்கிய கட்டிடங்களை யாரும் தொட முடியாது, அந்தக் கட்டிடங்கள் எல்லாம் திராவிடப் பாரம்பரியத்தை திராவிட இன உணர்வை திராவிட சமுதாய எழுச்சியை பரப்பக் கூடியவை. அதை யாராலும் ஒன்றும் செய்து விட முடியாது.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் ஆனாலும் சரி அல்லது நம்முடைய ஊர்களிலே நடைபெற்ற உட்கட்சித் தேர்தல்களானாலும் சரி அந்தத்தேர்தல்களில் ஏற்பட்ட வெற்றித்தோல்விகளையெல்லாம் மனதிலே வைத்துக்கொள்ளாதீர்கள். மறந்துவிடுங்கள். எப்படி ஸ்ரீரங்கம் தேர்தலை மறந்து விட்டு இங்கே மீண்டும் வெற்றி பெறுவோம் என்று கருதுகிறோமோ, நம்புகிறோமோ, அதைப்போல இதையும் கொஞ்சம் எண்ணிப்பாருங்கள்.

ஊருக்குப் போனதும், உள்கட்சித் தேர்தலை மனதிலே எண்ணி அதற்கு யாரையாவது பழி வாங்க வேண்டுமென்று யாரும் கருதாதீர்கள். பழிக்குப்பழி வாங்க வேண்டுமென்று கருதினால், நம்மீது தான் அந்த வாள் பாயும் என்பதை மறந்து விடாதீர்கள். இன்றைக்கு நாம் ஒருவரைப் பழி வாங்கினால், நாளைக்கு அவர் நம்மைப் பழி வாங்க மாட்டார் என்பது என்ன நிச்சயம்? ஆகவே இந்த பழி வாங்குகிற எண்ணம் கூடாது என்ற பரந்த மனப்பான்மை வேண்டும்.

உழைத்தால் தான் தேர்தலிலே வெற்றி பெற வேண்டும் என்ற அந்த லட்சியம் நிறைவேற வேண்டுமானால் அது பலிக்கும். தேர்தல் மாத்திரம் முக்கியமானதல்ல. இந்தச் சமுதாயத்தையும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

ஒற்றுமையாக இருங்கள். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு அதோடு மற்றொன்று ஒற்றுமை தி.மு.க. ஒற்றுமை. தி.மு.க.விலே ஒற்றுமை என்ற நான்காவது சொல்லையும் சேர்த்து கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, கழகத்திலே ஒற்றுமை என்பதிலே அந்த ஒற்றுமையைப் பேணிக் காப்போம் என்ற உறுதியை எடுத்துக் கொள்ளுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply