நிறைவேற்று அதிகாரத்தை மாத்திரம் மாற்றுவதற்கு சு.க. ஒருபோதும் இணங்காது
தேர்தல் முறையை மாற்றாமல் நிறைவேற்று ஜனாதிபதி முறையை மாத்திரம் ரத்துச் செய்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஒரு போதும் இணங்கப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். விருப்புவாக்கு முறையை ஒழித்து ஒவ்வொரு தொகுதிக்கும் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர் தெரிவாகும் கலப்பு தேர்தல் முறையொன்றே அறிமுகப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் கோரினார்.
பதுளையில் நடைபெற்ற மகளிர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய எதிர்க் கட்சித் தலைவர் மேலும் கூறியதாவது, நாட்டில் அரசியலமைப்பு திருத்தமொன்று இடம்பெற இருக்கிறது. எமது கட்சி நிறைவேற்று ஜனாதிபதி முறையை மாத்திரம் ஒழிப்பதற்கு உடன்படாது தேர்தல் திருத்தமும் அதனுடன் இணைந்து இடம்பெற வேண்டும். இரண்டையும் ஒன்றாக மாற்றுவதாகவே 100 நாள் திட்டத்தில் உறுதியளிக்கப்பட்டது.
அரசியலமைப்பு திருத்தத்தை கண்டபடி மேற்கொள்ள முடியாது. அவசர சட்டமூலத்தினூடாக அரசியலமைப்பை திருத்த இயலாது. நாட்டு மக்களுடன் பேச்சு நடத்தி இது தொடர்பில் கருத்தாடலொன்றை செய்தே திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். அதனால் அவசர சட்டமாக இதனை முன்வைக்க வேண்டாமென அரசாங்கத்தை கோருகி றோம்.
சாதாரண சட்டமூலமாக இதனை சமர்ப்பித்து உச்ச நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று மக்களின் கருத்தையும் பெற்றே யாப்பு திருத்தப்பட வேண்டும்.அரசியலமைப்பு திருத்தம் குறித்து ஆராய நியமிக்கப்பட்டுள்ள சுதந்திரக் கட்சி குழு இது குறித்து ஆழமாக ஆராய்ந்து வருகிறது. இந்த திருத்தங்களினூடாக பெண்களின் உரிமைகளும் பேணப்பட வேண்டும்.
முதலாவது பெண் பிரதமர் சுதந்திரக் கட்சியிலிருந்தே தோன்றியுள்ளார். இந்த நாட்டில் ஆட்சியை உரு வாக்குவதும் துரத்துவதும் பெண்கள்தான். நாம் ஆட்சியில் இல்லாத போதும் பெண்களின் கூடுதல் ஆதரவு எமக்கு காணப்படுகிறது என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply