சம்பூர் மீள்குடியேற்றத்துக்கு இனவாதச் சாயம்: புலிகளை குடியேற்றுவதாக கூறுவது அபாண்டம் : ஜனாதிபதி

இனவாதங்களைத் தூண்டும் வகையிலான செய்திகளையும் கட்டுரைகளையும் சமூக வலைத்தளங்கள் வெளியிட்டு வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். சமூக வலைத்தளங்கள் மக்கள் மத்தியில் குறிப்பாக இளம் சந்ததியினர் மத்தியில் பிரபல்யம் பெற்று வரும் நிலையில் இனவாதங்களை தூண்டும் வகையில் செய்திகளை பிரசுரிப்பது பாதிப்பை ஏற்படுத்துமென்றும் அவர் கூறினார். அரசாங்க ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பத்திரிகை ஆசிரியர்களை நேற்று சந்தித்த ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று முற்பகல் இந்தச் சந்திப்பு நடந்தது. அரசாங்க ஊடகங்களின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தச் சந்திப்பில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

சம்பூரில் மீள்குடியேற்றம் செய்யப்படுகிறது. இது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் செய்யப்படுகின்ற பிரசாரங்கள் உண்மைக்குப் புறம்பானதாகவே இருக்கின்றன. சம்பூரில் (திருமலை மாவட்டம்) இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்டு வருகிறார்கள். ஆனால் புலிகளை அரசு மீள்குடியேற்றுகிறது என பொய்ப் பிரசாரம் செய்வதோடு, இராணுவத்தையும், கடற்படையினரையும் அங்கிருந்து அகற்றுவதாக பிரசாரம் செய்கிறார்கள். இது முற்றிலும் பொய்யான செய்தியாகும்.

இனவாதத்தை முறியடிக்க வேண்டும். இது மக்களை விரைவாகப் பற்றக்கூடியது. இதனை முறியடிக்கும் வகையில் அரசாங்க ஊடகங்கள், அங்குள்ள உண்மை நிலையை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

பாராளுமன்றத்திலே இரண்டொரு தினங்களுக்கு முன்னர் நடந்த சம்பவங்கள் மிகவும் அசிங்கமானது. ஆனால் ஊடகங்கள் எம்.பிக்கள் நடந்து கொண்ட விதத்தையே காண்பித்தன. அது தொடர் பான உண்மை நிலையை வெளிக்கொணர வில்லை. உண்மையைச் சொல்லி மக்களைத் தெளிவுபடுத்த வேண்டும்.

கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னாண்டோவும் இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தார்.

சம்பூரில் இடம் பெயர்ந்த மக்களை மாத்திரமே மீள்குடியேற்றுகிறோம். இந்தப் பிரதேசத்திலிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டு முகாம்களில் மிகவும் கஷ்டமாக வாழ்கின்றனர். அங்கு இலையான்கள் மொய்க்கின்றன.

கடற்படையினரை வெளியேற்றிவிட்டு புலிகளை குடியேற்றப் போவதாக சமூக வலைத்தளங்களில் பிரசாரம் நடக்கிறது. இது எவ்வளவு அப்பட்டமான பொய் என்பதை நான் அறிவேன். ஊடகங்கள் உண்மை நிலையைக் கண்டறிய வேண்டும்.

கடற்படை அந்த இடத்தில் தேவையில்லை. ஒரு காலத்தில் புலிகள் இங்கிருந்துதான் தாக்கினார்கள் என்பது உண்மை. நிலைமை இப்போது மாறிவிட்டது. புலிகள் இல்லை. ஆகவே அந்த இடங்களில் இருந்து வெளியேறிய மக்களை மீள்குடியேற்றியே ஆகவேண்டும்.

அந்த மக்களும் சகல உரிமைகளும் கொண்ட இந்த நாட்டுப் பிரஜைகளாகும். செப்டெம்பரில் ஜெனீவா மாநாடு நடைபெறவுள்ளது. இந்த விடயங்களையும் கவனிக்க வேண்டும். மீள்குடியேற்று வதற்கான காணிகளுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷதான் கையொப்பமிட்டிருக்கிறார். அப்படியிருந்தும் இனவாதப் பிரசாரம் செய்வதை ஏற்க முடியாது. 237 ஏக்கர் காணியில் 537 குடும்பங்களை மீள்குடியேற்ற வேண்டும்.

அகதி முகாமில் இருக்கும் மக்களைச் சென்று பாருங்கள். ஒரு மணித்தியாலங்கூட நீங்கள் இருக்க மாட்டீர்கள். ஆகவே, ஊடகங்கள் உண்மை நிலையை வெளிப்படுத்த வேண்டுமென்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply