நிதி நெருக்கடியில் இருந்து மீளுமா கிரீஸ்?
கிரீஸ் நாட்டில் வாக்கெடுப்புக்குப் பின்னரும் கடுமையான நிதிநெருக்கடி நீடிக்கிறது.வங்கிகளில் பணம் இல்லாததால் பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர். பிரச்சனையை தீர்க்க ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாடு நடைபெற்றது. கிரீஸ் நாட்டுக்கு கடன் வழங்கிய நாடுகள் மற்றும் நிதிஅமைப்புகளுக்கு செலுத்த வேண்டிய கடனை கிரீஸ் அரசு திருப்பிச் செலுத்தாததால், சிக்கன நடவடிக்கையை மேற்கொள்ளும்படி அந்த அமைப்புகள் வலியுறுத்தின இதனை ஏற்றுக்கொள்வது குறித்து பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் ஐரோப்பிய நாடுகளின் நிபந்தனைகளை ஏற்க வேண்டாம் என 61 சதவீதத்துக்கும் அதிகமானோர் வாக்களித்தனர். இதையடுத்து, பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ் ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஐரோப்பிய யூனியனுக்கு எதிராக பெரும்பான்மையான மக்கள் வாக்களித்ததால் அதில் இருந்து கிரீஸ் விலகும் என்றும் ‘யூரோ’ நாணயத்தை பயன்படுத்த முடியாது என்றும் தகவல்கள் வெளியாகின இந்நிலையில், கிரீஸ் நாட்டுக்கு பெருமளவில் கடன் வழங்கியுள்ள ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கலும், பிரான்ஸ் அதிபர் ஹோலண்டேயும் பாரீஸ் நகரில் சந்தித்து பேசினர்.
அப்போது கிரீஸ் மக்களின் எண்ணத்தை மதிக்க வேண்டும் என இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.ஃப்ரான்ஸ் தலைநகர் பாரீஸில் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்த அவர்கள், கிரீஸ் நாட்டுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.
அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்ய ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாட்டை இன்று மாலை கூட்டுவது என்றும் இரு தலைவர்களும் முடிவு செய்தனர். அதன்படி இந்த மாநாடு இன்று கூடுகிறது. அதில் கிரீஸ் மக்களின் உணர்வுகளை மதித்து அதற்கு கூடுதலாக நிதி உதவி அளிப்பது பற்றி ஆலோசனை நடத்தப்படுகிறது.
கடன் சுமை காரணமாக கிரீஸ் வங்கிகள் பணமின்றி தள்ளாடும் நிலையில், தன்னிடம் வாங்கிய 350 கோடி யூரோ கடன் தொகையை வருகிற 20–ந் தேதிக்குள் செலுத்த வேண்டும் என, ஐரோப்பிய மத்திய வங்கி கிரீஸ் நாட்டுக்கு கெடு விதித்துள்ளது. அதன்படி கடன் தொகையை கிரீஸ் செலுத்தா விட்டால் அவசர கால கடன் உதவியை ஐரோப்பிய மத்திய வங்கி முற்றிலும் நிறுத்திவிடும்.இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால், கிரீஸ் வங்கிகள் அனைத்தும் முற்றிலும் தனது செயல்பாட்டை இழக்க நேரிடும்.
எனவே, இன்று ஐரோப்பிய நாடுகளின் உச்சி மாநாட்டில் எடுக்கப்படும் முடிவே கிரீஸ் நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என சர்வதேச பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.ஓட்டெடுப்புக்கு பின்னரும் கிரீஸ் நாட்டின் வங்கிகளில் பணம் இல்லாததால் அந்நாட்டு மக்கள் தொடர்ந்து இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply