ராஜீவ்காந்தி கொலை விசாரணை: ஆயுள் தண்டனையை குறைப்பது மாநில அரசின் உரிமை-சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வாதம்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைக்கைதிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது குறித்து தமிழக அரசு எடுத்த முடிவுக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது.  தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையில் நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, பி.சி.கோஷ், ஏ.எம்.சப்ரே, யு.யு.லலித் ஆகியோரை கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் மீதான வாதங்கள் நேற்று மீண்டும் தொடர்ந்தது.

8-வது நாளாக நேற்று நடைபெற்ற விசாரணையில் தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ராகேஷ் திவிவேதி தனது வாதத்தில் கூறியதாவது:-

இந்த வழக்கில் தொடர்புடைய சம்பவம் தமிழ்நாட்டில் நடைபெற்றது. இது குறித்து வழக்கும் தமிழ்நாட்டில்தான் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்காக மட்டுமே சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது. விசாரணை நிறைவடைந்து தண்டனை வழங்கப்பட்ட நிலையிலும் இதையே(சி.பி.ஐ. விசாரணை) காரணம் காட்டி மத்திய அரசு இந்த வழக்கில் உரிமை கோருவது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இவர்களை விடுவிப்பது குறித்து மாநில அரசு, மத்திய அரசின் அனுமதியை கோரத் தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது நீதிபதிகள், “இது மிகவும் முக்கியமான வழக்கு. முன்னாள் பிரதமர் கொலை வழக்கு. அப்படிப்பட்ட வழக்கில் மாநில அரசு முக்கிய முடிவை எடுக்கும் பட்சத்தில் அது குறித்து மத்திய அரசை கலந்து ஆலோசித்து இருக்கலாமே?“ என்று கருத்து தெரிவித்து இந்த வழக்கின் தன்மை குறித்து விளக்குமாறு சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமாரிடம் கூறினர். அதற்கு, ரஞ்சித்குமார் “இந்த வழக்கில் 26 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. அவர்களில் 13 பேர் இந்தியர்கள். 13 பேர் இலங்கையை சேர்ந்தவர்கள். இதில் 4 பேருக்கு தூக்கு தண்டனையும், 3 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. மற்றும் 19 நபர்களுக்கு இதர தண்டனைகள் வழங்கப்பட்டு உள்ளன“ என விவரித்தார்.

இதையடுத்து மீண்டும் வாதத்தை தொடர்ந்த ராகேஷ் திவிவேதி கூறியதாவது:-

இந்தியா முழுவதும் ஏறத்தாழ 23 ஆயிரம் வழக்குகள் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு கோர்ட்டுகளில் நடைபெற்று வருகின்றன. இத்தனை வழக்குகளிலும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், மத்திய அரசின் ஆலோசனை அல்லது அனுமதி பெற்றே எந்த முடிவையும் எடுக்கவேண்டும் என்பது எந்த அளவில் சரியாகும்? ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு தண்டனை குறைப்பு என்பது சிறையில் அவர்களுடைய நன்னடத்தை மற்றும் பொதுநலம் கருதி மாநில அரசு செய்யப்படுவது ஆகும். இது மாநில அரசுக்கான உரிமை. அதில் எந்த அமைப்பு விசாரணை நடத்தி இருந்தாலும் தண்டனை குறைப்பு என்பது வழக்கில் நேரடியாக தொடர்புடைய மாநில அரசின் உரிமை.

முன்னதாக மத்திய அரசு சார்பில் இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றால் மத்திய அரசு மூலமாக கவர்னரிடமோ அல்லது ஜனாதிபதியிடமோ கருணை மனுவை தாக்கல் செய்திருக்கவேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால் யாகூப் மேமன் வழக்கில் அதே மத்திய அரசானது ஒருவர் எத்தனை கருணை மனுவைத்தான் தாக்கல் செய்வது என்று கேள்வி எழுப்பியது. சட்டரீதியாக ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் கருணை மனுவை தாக்கல் செய்யலாம். இது சட்டம் அவர்களுக்கு வழங்கும் அடிப்படை உரிமை. எனவே கருணை மனுக்கள் இத்தனை முறைதான் தாக்கல் செய்யவேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கமுடியாது.

இவ்வாறு அவர் வாதிட்டார்.

தமிழக அரசின் வாதங்கள் நாளையும் (இன்று) தொடரும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply