அமெரிக்காவில் முன்னாள் காலிஸ்தான் தலைவர் குத்திக் கொலை

பஞ்சாப் மாநிலத்தை சீக்கியர்களுக்கான தனிநாடாக பிரித்துத்தர வேண்டும் என்ற கோரிக்கையுடன் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் ஆயுதப் போராட்டம் நடத்திவந்த காலிஸ்தான் இயக்கத்தின் முன்னாள் தலைவர்களில் ஒருவர் அமெரிக்காவில் குத்திக் கொல்லப்பட்டார்.காலிஸ்தான் போராட்டம் தீவிரமடைந்து உச்சகட்டத்தில் இருந்தபோது அகில இந்திய சீக்கிய மாணவர் சம்மேளனத்தின் செய்தி தொடர்பாளராக இருந்தவர் சத்விந்தர் சிங் போலா. காலிஸ்தான் இயக்கத்தவர்களின் வன்முறை வெறியாட்டத்தை சகித்துக் கொள்ள இயலாத மத்திய அரசு கடந்த 1984-ம் ஆண்டு அமிர்தசரசில் உள்ள பஞ்சாப் பொற்கோயிலுக்குள் ராணுவத்தை அனுப்பி அதிரடி தாக்குதல் நடத்தியது.

ஆபரேஷன் புளூ ஸ்டார் என அழைக்கப்பட்ட இந்த நடவடிக்கையில், கோயிலின் உள்ளே ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த தீவிரவாதிகளில் சிலர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலர் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் சத்விந்தர் சிங் போலாவும் ஒருவர். இரண்டாண்டு தண்டனைக்கு பின்னர் சிறையில் இருந்து விடுதலையான இவர் அமெரிக்காவுக்கு சென்று அங்குள்ள கலிபோர்னியா நகரில் குடியேறினார்.

பின்னர், அங்கிருந்து சிகாகோ நகருக்கு இடம்பெயர்ந்து சென்று ஓட்டல் நடத்தினார். தற்போது இல்லினாய்ஸ் நகரில் பல்பொருள் மற்றும் மதுபானக் கடை நடத்திவரும் சத்விந்தர் சிங் போலா(52) அவரது வீட்டு வாசலில் நேற்று குத்திக் கொல்லப்பட்டார்.

தனது வீடு அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பின் வெளியே காரை நிறுத்த முயன்ற அவரை அடையாளம் தெரியாத மர்ம நபர் கத்தியால் சரமாரியாக குத்தியதாகவும், கழுத்தில் ஆழமாக பாய்ந்த கத்திக்குத்தின் விளைவாக சத்விந்தர் சிங் போலா உயிரிழந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply