இலங்கையில் ஆட்சி நடப்பது எப்படி? ஜனாதிபதிக்கே முழு அதிகாரம்

இந்தியா போல் அல்லாமல் இலங்கையில் அதிபர் ஆட்சி முறை கடைப்பிடிக்கப்படுகிறது. ஜனாதிபதிக்கே அங்கு முழு அதிகாரம் உள்ளது. அதிபருக்கு அடுத்தபடியாகத்தான் பிரதமர் இருப்பார். ஆனால் எந்த நடவடிக்கைகளையும் பாராளுமன்றத்தின் ஒப்புதலுடன் தான் நிறைவேற்ற முடியும். அதிபர் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவார். பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி.க்கள் பிரதமரை தேர்வு செய்வார்கள்.

கடந்த ஜனவரி மாதம் நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை வீழ்த்தி இலங்கை சுதந்திரா கட்சியைச் சேர்ந்த மைத்ரி பால சிறிசேனா வெற்றி பெற்று ஜனாதிபதி ஆனார். அவர் தலைமையில் புதிய மந்திரி சபை பதவி ஏற்றது.

அதிபர் தேர்தலில் சிறிசேனாவுக்கு பிரதமர் ரனில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்தன. இதனால் ராஜபக்சே படுதோல்வி அடைந்தார்.

சிறிசேனாவும் ராஜபக்சேவும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள். ராஜபக்சே அதிபராக இருந்த போது சிறிசேனா அவரை எதிர்த்து போர்க்கொடி தூக்கி வெளியேறியவர். தேர்தலில் வெற்றி பெற்று அதிபர் ஆனதும் கட்சியை கைப்பற்றி தலைவர் ஆனார்.

எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் ரனில் விக்ரமசிங்கே பிரதமராக இருக்கிறார். இதற்கிடையே பாராளுமன்றத்தில் அதிபர் சிறிசேனாவின் இலங்கை சுதந்திரா கட்சிக்கு எம்.பி.க்கள் பலம் இல்லாததால் அவரது பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் பெற முடியவில்லை.

இதையடுத்து அதிபர் சிறிசேனா பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு ஆகஸ்டு 17–ந்தேதி தேர்தல் நடத்த உத்தரவிட்டார்.

இந்த தேர்தலில் ரனில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ஐக்கிய நல்லாட்சி முன்னணி, அதிபர் சிறிசேனாவின் இலங்கை சுதந்திரா கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜனதா விமுக்தி பெரமுனா ஆகிய 4 பிரதான அணிகள் போட்டியிட்டன.

இதுதவிர 60 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் 100 சுயேச்சைகளும் போட்டியிட்டார்கள்.

இதில் அதிபர் சிறிசேனா கட்சி சார்பில் முன்னாள் அதிபர் ராஜபக்சே போட்டியிட்டார். அவரை பிரதமர் வேட்பாளராக ஆதரவாளர்கள் அறிவித்தனர். ஆனால் ராஜபக்சேவுக்கு பிரதமர் பதவி அளிக்க மாட்டேன் என்று சிறிசேனா பகிரங்கமாக அறிவித்தார்.

அதே சமயம் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதமர் வேட்பாளராக ரனில் விக்ரமசிங்கேயை அக்கட்சி மீண்டும் நிறுத்தியது.

இலங்கை பாராளுமன்றத்தின் மொத்த எம்.பி.க்களின் எண்ணிக்கை 225 ஆகும். இதில் 196 பேர் நேரடியாக தேர்தலில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மீதம் உள்ள 29 எம்.பி.க்கள் கட்சிகள் பெற்ற வாக்குகள் வித்தியாசத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். அறுதி பெரும்பான்மைக்கு 113 எம்.பி.க்கள் தேவை. மெஜாரிட்டி எம்.பி.க்கள் ஆதரவுடன் பாராளுமன்றத்தில் பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply